காரைதீவு நிருபர்
பெருந்தலைவர் அஷ்ரப் உயிருடன் இன்று இருந்திருந்தால் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்தான் தேர்தலுக்கு வேலை செய்திருப்பார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
இது தொடர்பாக இவர் நேற்று புதன்கிழமை முஸ்லிம் மக்களுக்கு விடுத்த செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளவை வருமாறு
மறைந்த தலைவர் எம். ச். எம். அஷ்ரப்பின் அரசியல் பறி போய் விட்டது. எமது தலைவர் எம். எச். எம். அஷ்ரப் முஸ்லிகளுக்கும், முஸ்லிம்களின் விடுதலைக்குமான அரசியலை செய்தார். முஸ்லிம்களும் இந்நாட்டு பிரஜைகள்தான், இலங்கை சிங்கள மக்களோடும், தமிழ் மக்களோடும் நெருக்கமான உறவோடு வாழ்ந்து வருகின்ற மக்கள் என்று நிரூபிக்கின்ற அரசியலாகவேதான் அது இருந்தது.
ஆனால் அந்த அரசியலை ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு காலமும் செய்யவில்லை. அதனுடன் செய்யவும் முடியாது. அந்த அரசியலை இடதுசாரிகளுடன் சேர்ந்து நிற்கின்ற, வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற சிங்கள மக்களின் அதிகமான ஆதரவை பெற்ற கட்சிகளுடன்தான் செய்ய முடியும். முன்பு அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இருந்தது. இப்போது அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக இருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஸவின் தந்தை டி. ஏ. ராஜபக்ஸ ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறி சென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஸ்தாபித்தவர்களில் முக்கியமான ஒருவர். அதே போலதான் மஹிந்த ராஜபக்ஸவும், அவர்களுடைய சகோதரர்களும் சுதந்திர கட்சியை விட்டு வெளியேறி வந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி உள்ளனர். ஆகவே அஷ்ரப் சேர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் நிச்சயமாக பொதுஜன பெரமுன கட்சியுடன்தான் தேர்தலுக்கு வேலை செய்திருப்பார் என்று நிச்சயமாக நம்ப முடியும்.
ஏனென்று சொன்னால் ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம்கள் அரசியல் செய்ய முடியாது. முஸ்லிம் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் வியாபாரம்தான் செய்யலாம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனும், அதில் இருந்து வந்த பொதுஜன பெரமுனவுடனும்தான் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியலை செய்ய முடியும். சுதந்திர கட்சியுடன் மிக நீண்ட காலமாக அரசியல் செய்து வந்த தலைவர் அஷ்ரப் மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார்.
இப்போது நடப்பது அவர் செய்த அரசியல் அல்ல. அவரின் மரணத்துக்கு பின் மு. கா தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் செய்து வருவது வியாபாரம் ஆகும். சர்வதேச சதி திட்டத்துக்கு அமைய முஸ்லிம்களை மோசமாக தனிமைப்படுத்தியும், முஸ்லிம்களை மோசமாக பாதிக்க வைத்தும் ஐக்கிய தேசிய கட்சி அரசியல் செய்கின்றது. அந்த சதியிலே எமது இளைஞர்கள் பலர் அகப்பட்டு விட்டனர். அந்த சதியில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை அடைய வேண்டும்.
மனிதர்களை அரசியல் பிராணி என்று சொல்வார்கள். ஆனால் இலங்கையில் இன்று முஸ்லிம்கள் சந்தேக பிராணி. இதை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் இதயத்தில் உட்கார்ந்து இருக்கின்ற, பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆதரிக்கின்ற ராஜபக்ஸக்களுடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரம்தான் எமது முஸ்லிம் மக்களுக்கான எதிர்காலத்துக்கு பாதுகாப்பு உள்ளது, அச்சம் அற்று நாம் வாழ முடியும். அதற்காக நாங்கள் எல்லோரும் கோதாபய ராஜபக்ஸவின் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து அவரின் வெற்றியில் பங்காளிகளாக வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.
Post A Comment:
0 comments so far,add yours