கல்விக்கு வயது தடையில்லை - 59 வயதில் கல்லூரிக்கு போகும் எம்.எல்.ஏ

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய டிகிரியை முடிப்பதற்காக மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறார்.



உதய்ப்பூர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ பூல் சிங் மீனா. வயதினை பெரும் தடையாக கருதாமல் 59 வயதில் டிகிரி படித்துக் கொண்டிருக்கிறார். பூல் சிங்கின் இந்த முயற்சிக்கு அவரது மகள்களின் ஊக்கம் தான் காரணமாக அமைந்தது. ஒரு புறம் அரசியல் வாழ்க்கை மற்றொரு புறம் கல்லூரி படிப்பு வாழ்க்கை என பூல் சிங் தற்போது பிசியாக உள்ளார்.

பூல் சிங் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பூல் சிங் மீனாவின் தந்தைக்கு 4 பெண் குழந்தைகள். அவர் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவரது தந்தை இறந்துவிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் படிப்பை நிறுத்திவிட்டார். 


படிப்பை நிறுத்திவிட்டு விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார் பூல் சிங். இதுகுறித்து பூல் சிங் கூறுகையில், ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய தந்தை இறந்த பின்னர், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 


என்னுடைய குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்தது. அதனால், என்னுடைய நிலத்தில் விவசாய பணியை மேற்கொள்ள தொடங்கினேன் என்றார். அதன்பிறகு வாழ்க்கையில் முன்னேறி எம்.எல்.ஏ பதவி வரைக்கும் வந்துள்ளார் பூல் சிங்.



பூல் சிங்கிற்கு 5 மகள்கள் இருக்கிறார்கள். தன்னுடைய மகள்களின் ஊக்கம் காரணமாக அவர் மீண்டும் படிப்பை தொடர முடிவு செய்தார். அதன்படி 7ம் வகுப்பில் படிப்பை விட்ட பூல் சிங், 2013ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்தார். ஆனால், அரசியல் வாழ்க்கையில் பிசியாக இருந்ததால் 2016ம் ஆண்டுதான் தேர்வு எழுதினார். பின்னர் ஒருவழியாக 2016-17ம் கல்வி ஆண்டில் பூல் சிங் தனது பிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

பிளஸ்-2 படிப்போடு நிறுத்தாமல் கல்லூரி படிப்பையும் தொடர வேண்டும் என்று அவரது மகள்கள் மேலும் ஊக்கம் அளித்துள்ளனர். அதன்படி தற்போது, பி.ஏ படிக்க விண்ணப்பித்துள்ளார். அதுவும் அரசியல் அறிவியல் படிப்பைதான் அவர் தேர்வு செய்துள்ளார். 

பூல் சிங் கூறுகையில், நீங்கள் நிறைய மக்களுடன், அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் உரையாடுகிறீர்கள், அதனால் கல்வி முக்கியமானது என்று எனது மகள்கள் கூறினர். 

ஆனால், எனது வயதை எண்ணி தயக்கம் காட்டினேன். இருப்பினும், அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றியது. கல்வியின் முக்கியத்துவம் குறித்து எல்லோரிடமும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் கல்வி பெறாமல் உள்ளேன் என்ற எண்ணம் உருவானது. அதனால், படிப்பை மீண்டும் தொடர முடிவு செய்தேன் என்றார்.


பூல் சிங் அரசியல் வாழ்க்கையில் பிசியாக இருப்பதால் தொடர்ச்சியாக கல்லூரி வகுப்புகளுக்கு செல்ல முடிவதில்லை. அதனால், அவர் பயணத்தில் இருக்கும் போதே அவருக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதாக கல்லூரியின் முதல்வர் கூறுகின்றார். ஆடியோவில் பாடத்தை பதிவு செய்தும் அவருக்கு கொடுக்கப்படுகிறது.

அவர் படிக்கும் கல்லூரியின் முதல்வர் லுனாவட் கூறுகையில்,40 வருடங்களுக்கு பின்னர் பூல் சிங் தனது படிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். தேர்தல் வருடங்களில் கூட தேர்வுக்கு வருவதில் இருந்து அவர் விலக்கு கேட்டதில்லை. டிகிரி முடித்த பின்னர் முதுகலை படிப்பையும், அதனை தொடர்ந்து பி.ஹெச்டியும் படிக்கவுள்ளார்

பூல் சிங்கின் மூன்றாவது மகள் தீபிகா கூறுகையில், என்னுடைய தந்தை விடா முயற்சியுடன் படித்தார். 10ம், 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இப்பொழுது டிகிரி படித்துக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.

இது ஒருபுறம் இருக்க தன்னுடைய தொகுதியில் உள்ளவர்களின் படிப்பில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரதமரின் ‘பெட்டி பச்சோ பெடி படோ திட்டத்தால் ஈர்க்கப்பட்ட பூல் சிங் தன்னுடைய தொகுதியில் உள்ள எஸ்.சி/எஸ்.டி பெண்கள் படிப்பை தொடர ஊக்குவித்தார். 

அதோடு, 10வது மற்றும் 12வது வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேலாக மதிப்பெண் எடுக்கும் பெண்கள் ஜெய்ப்பூர் செல்ல இலவச விமான டிக்கெட்டையும் அறிவித்தார். அதன்படி 2016ம் ஆண்டு 2 மாணவிகளும், 2017ம் ஆண்டு 6 மாணவிகளும் விமானத்தில் ஜெய்ப்பூர் சென்றனர்.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours