(டினேஸ்)


ஏற்கனவே, இரண்டு முறை மாற்றம் கேட்டு வாக்களித்த தமிழ் பேசும் சமூகம் தாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற படாமல் நிலுவையில் உள்ளபடியே இந்த தேர்தலையும் சந்திக்க தயாராகின்றனர்.

மஹிந்த சிந்தனை, மைத்திரியின் 100 நாட்கள் என தேச நலன் பாடங்களை இரண்டுமுறை நன்கு கற்றுத் தேர்ந்த தமிழ் தரப்பின் அரசியலையும், வரப்போகும் சனாதிபதி கதிரை அரசியலையும் ஆராய்வோம்!

வரப்போகிற தேர்தலில் சனாதிபதியாக யார் தெரிவுசெய்யப்பட்டாலும்,
தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக முனைப்புடன் செயற்படும் அழுத்த சக்தி  இல்லையென்பதாலும்,

மதக்குழுக்கள், வணிக நிறுவனங்கள் , வெகுசன அமைப்புக்களை இணைத்து ஒரு மக்கள் இயக்கத்தின் பணிகளை துரிதப்படுத்தும் செயற்திட்டம் இல்லையென்பதாலும், 

தெற்கு அதிகார வர்க்கத்தின் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு தமிழருக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சிந்திப்பார்கள் என்று தமிழர் தரப்பு பகல் கனவு காண கூடாது.

தமிழ் மக்களுக்கான இன அடையாளத்தை, அரசியல் உரிமைகளை, அரசியல் தீர்வை, அபிவிருத்தியினை  வழங்குவதற்கு பின்னடிக்கும் இலங்கை அரசு, அதற்கான காரணமாக தனது மறைமுகமான ஆதரவோடு இயங்குகின்ற அல்லது தம்மால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவாத சக்திகளை சுட்டிக்காட்டுகின்றது. 

அத்துடன், சிங்கள தேசத்தின் நலனை பூர்த்தி செய்வதற்காக, பல்வேறு கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. இதில​ மதக் குழுக்கள், சிவில் சமூகம், வணிக நிறுவகங்கள், அரச சார்பற்ற அமைப்புகளும் உள்ளடக்கம்.

தமிழ் மக்களின் 70 வருட காலத்திற்கும் மேற்பட்ட போராட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் தமிழர் அரசியல் வெறுமனே, வலதுசாரிய பண்புள்ள கட்சி அரசியலுக்குள்ளும், வாக்களிக்கும் பண்போடும், சுயநலவாத போக்கிற்குள்ளும் குறுகி போயுள்ளது என்பதே உண்மை!

ஆகவே, தமிழ் மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள் பல உள்ளன,
1.அபகரிக்கப் பட்ட நிலங்களை திரும்பி வழங்கு
2.வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை தெரிவி
3.அரசியற் கைதிகளை விடுதலை செய்.
 4. போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் முதற்கொண்டு பல சனநாயக உரிமைகள் கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
 5.  இது மட்டுமின்றி வேலை இல்லாமை கடன் சுமை நீக்கம் பற்றியும் மக்கள் அதிருப்தி கொடுள்ளனர்.
  மிகவும் பின் தங்கிய பிரதேசமாக ஆக்கப் பட்டுள்ள தமிழ் மக்கள் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டை அடைவது எப்பாடி என்பது முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது இவ்வாறு தமிழ் மக்கள் நிலைப்பாடு இருக்கும் பொழுது, இவற்றை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தும் சனாதிபதி வேட்பாளரை சிங்கள பௌத்த மேலாதிக்க வாத தரப்பு விரும்புமா? அல்லது சிங்கள மக்களின் நலனை முதன்மை படுத்தும் வேட்பாளரை விரும்புமா? என்பதனை தற்போது தெற்கில் ஏற்பட்டிருக்கும், ஒருவகை இனவாத மைய பொறிமுறையிலான பிரசாரங்கள் மூலம் வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ள முடியும்!

அதைவிட, தெரிவு செய்யப்படப்போகும் சனாதிபதிக்கு ஐ.நா,அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகள், இந்திய, சீனா உட்பட்ட ஆசிய பிராந்தியங்கள் மூலம் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதும் மிகப்பெரிய முட்டாள் தனமான செயற்பாடாகும்! 

ஏனெனில், மேற்குறிப்பிட்ட பிராந்தியங்கள் தமது சமூக பொருளாதார நலனை கருத்தில் கொண்டே தமது அரசியல் நிகழ்ச்சி நிரலினையும், ஆதரவு நிலைப்பாட்டினையும் முன்வைப்பார்களே தவிர, வெறுமனே 30 இலட்சம் தமிழ் மக்களின் நலனையோ அல்லது கோரிக்கைகளையோ கவனத்தில் கொள்வார்கள் என நாம் கனவு காண கூடாது!

இந்த நிலையில் தமிழ் பேசும் சமூகமாகிய நாம்  என்ன செய்து விட முடியும் என்கிற கேள்வி எம் முன்னே இருக்கிறது! 

எல்லா விதத்திலும் அதிகாரமற்று ,  பலவீனமான குழுவாக நிற்பதாக உணரும் தமிழ்  மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க பொருளாதார முனேற்றம் அடைய என்ன செய்துவிட முடியும். 

நாம் எமது அதிகாரத்தை கட்டி நிமிர்த்தாமல் நாம் எமது பலத்தை திரட்டாமல் எந்த வெற்றியையும் அடைந்து விட முடியாது. எந்த சக்திகளையும் எமது கோரிக்கைக்கு செவி மடுக்கச் செய்து விட முடியாது. 

நாம் எமது பலத்தை திரட்டுவது என்பது என்ன என சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட மக்கள் விரோத கொள்கை உள்ள (வலதுசாரிய) கட்சிகள் பின்னால் திரள்வதால் எமது பலத்தை நாம் கட்டி விட முடியாது.

 மக்களின் கோரிக்கைக்களை முதன்மைப்படுத்தும் – மக்களின் நலன்களை முதன்மையாக வைத்து இயங்கும் – சனநாயக அமைப்பு ஒன்று அவசியம். 
அத்தகைய அமைப்பாக மக்கள் திரளாமல் எமது பலத்தை நாம் நிறுவிக் காட்ட முடியாது.

அதனால் அத்தகைய அமைப்பு நோக்கி மக்களின் அரசியற்  திரட்சி வேண்டும் என கோருகிறோம். 
அதன் முதற் தொடக்கமாக மக்கள் அரசியல் மயப்பட வேண்டும் – ஆங்காங்கு சனநாயக கோரிக்கைகள் அடிப்படையில் திரட்சிகள் நிகழ வேண்டும். 

ஆகவே, தெற்கு அதிகார வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டு வலது சாரிய கட்சிகளால் தெரிவு செய்யப்படும் சனாதிபதி தொடர்பில் தமிழ் மக்கள் அலட்டிக்கொள்ளாமல், தமிழ் மக்களின் நலனை முதன்மை படுத்திய மாற்றத்திற்காக மக்கள் சக்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours