( ரனா)
தமிழ் அரசியல் தலைமைகள் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் அவை அத்தனையும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றன, தமிழ் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளனர், ஆனால் முஸ்லிம்களின் தலைமைகளும், மக்களும் காலத்துக்கு காலம் மாறி மாறி கோஷ்டிகளுக்கு வாக்களிப்பவர்களாகவே உள்ளனர் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கரையோர மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் கடந்த சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது. செயலாளர் நாயகம் ஹசன் அலி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தவிசாளர் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பிரதி தலைவர் முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி நிஜாமுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்கள் கேட்டு அறியப்பட்டன. இவற்றின்போது முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் களம் குறித்து ஆராயப்பட்டது. இவற்றில் தலைமையுரை ஆற்றியபோது ஹசன் தெரிவித்தவை வருமாறு
நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களினதும் நன்மையை முன்னிறுத்தி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் ஒரு பக்கம் சேர்ந்தனர். முஸ்லிம்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கின்ற வரை அமைச்சு பதவிகளை எடுக்கவே மாட்டோம் என்று சபதம் செய்தனர். ஆனால் இரு கிழமைகளுக்குள் இரு அமைச்சர்கள் பதவிகளை பொறுப்பெடுத்தனர். சிங்கள மக்களின் வாக்குகளால் இருவரும் தெரிவாகி பாராளுமன்றம் வந்திருக்கிற நிலையில் சிங்கள மக்களின் கடுமையான அழுத்தம் காரணமாகவே போராட்டத்தை இருவரும் கை விட்டு பதவிகளை பொறுப்பேற்க நேர்ந்ததாக அவர்கள் தரப்பில் அப்போது சொல்லப்பட்டது.
சிங்கள வாக்குகளில் தெரிவு செய்யப்படுகின்ற அல்லது சிங்கள வாக்குகளை நம்பி உள்ள முஸ்லிம் எம். பிகள் என்கிற பிரிவு இதன் மூலம் வெளிப்பட்டு நிற்பதை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. ஆயினும் அவர்களின் தீர்மானம் தவறானது என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் யதார்த்தம் எதுவோ அதுவே நடந்து உள்ளது. முஸ்லிம் பெயர்களை கொண்டிருக்கின்ற நிலையில் இவர்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை கதைக்க முடியுமே ஒழிய அதற்கு அப்பால் எதையுமே செய்ய முடியாது என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
பதவிகளை இராஜினாமா செய்தவர்களில் ஒரு தொகையினர் கொஞ்ச நாட்கள் வெளியில் இருந்து விட்டு வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை கை விட்டவர்களாக அரசாங்கத்தில் இணைந்தனர். கிழக்கு மாகாண முஸ்லிம் எம். பிகள் என்கிற பிரிவு தனித்து விடப்பட்டிருக்கிற பரிணாமமும் இதில் வெளிப்பட்டு நிற்கின்றது.
நான் இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். தமிழர்களின் அரசியல் தலைமைகள் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் அவை அத்தனையும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றன. காரணம் தமிழ் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் காலத்துக்கு காலம் மாறி மாறி கோஷ்டிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களாக முஸ்லிம்களின் தலைமைகளும், மக்களும் உள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours