வாட்ஸ் ஆப் தளங்களில் அதிகமாகப் போலி செய்திகள், அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் ஏகப்பட்ட பிரளயங்கள் இந்தியாவில் நடந்தது, பலரின் உயிர்களும் கூட வீணாய்ப் போனது.
போலி செய்திகள் அனுப்பும் பயனர்களின் விபரங்களைக் கண்டறியும் புதிய முறையை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரான வி.காமகோடி புதிய தீர்வை வலியுறுத்தியுள்ளார்.
வாட்ஸ் ஆப் நிராகரிக்க காரணம் : இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் சில நிபந்தனைகளைத் தொடர்ச்சியாக வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் வாட்ஸ் ஆப் இதை செய்ய மறுத்து தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் தனி நபர் பயனர் தகவலுக்கு ஆபத்து உள்ளது என்பது தான்.
புதிய தீர்வு : அரசாங்கம் வலியுறுத்திய நிபந்தனைக்கு ஏற்றதாகவும், வாட்ஸ் ஆப் மூலம் பரவும் போலி செய்திகளைப் பரப்பும் நபரின் அடையாளத்தை அறிவதற்குத் தீர்வாக இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரான வி.காமகோடி புதிய தீர்வை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து வலியுறுத்தியுள்ளார்.
முதல் நபரின் விபரம் அனைவருக்கும் தெரியும் : பேராசிரியர் வி.காமகோடி இரண்டு முறைகளை வலியுறுத்தியுள்ளார். இதன்படி வாட்ஸ் ஆப் இல் செய்திகளை அனுப்பும் முதல் நபர் விபரத்தை டேக் செய்து, மெசேஜ் ஃபார்வர்டு செய்யப்படும் அனைத்து நபர்களுக்கும் முதல் நபரின் விபரம் தெரியும்படி செய்யலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஃபார்வர்டு செய்யப்படும் தகவல்களில் ஏதேனும் மாற்றம் செய்து ஃபார்வர்டு செய்தால் ஃபார்வர்டு செய்தவரின் பெயரில் மெசேஜ்கள் புதிதாக ஃபார்வர்டு ஆகும், இதனால் தவறுஎங்கு நடந்தாலும் கண்டறிய முடியும்.
வாட்ஸ் ஆப் நிறுவனம் மட்டும் பார்க்கலாம் : அதேபோல் இரண்டாம் முறைப்படி, வாட்ஸ் ஆப் இல் ஃபார்வர்டு அனுப்பும் முதல் நபர் விபரத்தை டேக் செய்து அதை வாட்ஸ் ஆப் நிறுவனம் மட்டும் பார்க்கும்படி அனுமதி வழங்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த முறைப்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்தைத் தவிர வேறு நபர்கள் யாரும் முதல் நபர் தகவலைப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் பாதுகாப்பு : இந்த முறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்ய மறுத்திருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் வாட்ஸ் ஆப் பயனர்களின் தனி விபரங்கள் வெளியிடப்படலாம் என்பது தான். எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் என்ற பாதுகாப்பான முறையில் தான் தற்பொழுது வாட்ஸ் ஆப் பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் கண்காணிக்கும் : வாட்ஸ் ஆப் நிறுவனம் அரசாங்கம் கூறும் நிபந்தனைகளைச் செய்ய ஒப்புக்கொண்டால், பயனர்களின் தகவல் மற்றும் செயல்களை அரசாங்கம் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கண்காணிக்கலாம். இதனால் பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பில் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனால் வாட்ஸ் ஆப் நிராகரிக்கிறது. அதுமட்டுமின்றி வாட்ஸ் ஆப் தளத்தில் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் வாட்ஸ் ஆப் புதிதாக உருவாக்க வேண்டும் என்பதும் ஒரு காரணமே. இந்த இரண்டு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப் இதை நிராகரித்து வருகிறது.
வழக்கின் அடுத்த விசாரணை : இருப்பினும் வாட்ஸ் ஆப் செயலியை டவுன்லோட் செய்யும்பொழுது வாட்ஸ் ஆப் அவர்களின் மொபைல் எண், பிரௌசர் தகவல், ஸ்மார்ட்போன் தகவல், இயங்குதளம் விபரம், IP அட்ரஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் போன்ற தகவலை பெற்றிருக்கிறது என்று காமகோடி அவரின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 21-22 நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours