நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours