இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்துக்குப் பதவியுயர்வு வழங்குவதற்காக, கல்வியமைச்சால் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம், விவரம் கோரும் படிவம் ஆகியன சிங்கள மொழியில் மாதிரம் அமைந்திருப்பதாக, இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இம்மொழிப்புறக்கணிப்பானது, அரசாங்கத்தின் தேசிய மொழிக்கொள்கையை அப்பட்டமாக மீறும் செயற்பாடு எனவும் அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது விடயமாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், நேற்று
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவை தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு தனிச் சிங்களத்தில் மேற்படி கடிதமும் விவரம் கோரும் படிவமும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், அதனை வாசித்து புரிந்துகொள்ள முடியாமலும் அப்படிவத்தை சிங்கள மொழியில் பூர்த்தி செய்ய முடியாமலும் அவர்கள் திண்டாட வேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
கடந்தமுறை மேற்படி விடயம் தொடர்பிலான கடிதம், படிவம் என்பன தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அவர்களது தாய் மொழியிலேயே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை ஆகக்குறைந்தது ஆங்கில மொழி மூலமாவது சம்மந்தப்பட்டோரின் விவரங்களை கோராமல், சிங்கள மொழியில் மாத்திரம் கோரியிருப்பதானது இவர்களை பெரும் அசௌகரியப்படுத்தியிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.  
அது மாத்திரமின்றி, இப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு குறுகிய கால அவகாசமே கல்வியமைச்சால் வழங்கப்பட்டிருப்பதாகவும் இவை தொடர்பில் கல்வியமைச்சு உடனடியாக பரிசீலனை செய்வதுடன், எதிர்காலங்களில் இவ்வாறு இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், சங்கத்தின் செயலாளர் வலியுறுத்தினார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours