(-க. விஜயரெத்தினம்)


ஜனாதிபதி செயலகமும்,பாதுகாப்பு அமைச்சும் இணைந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பில் கிராம பாதுகாப்பு குழுக்கூட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


ஜனாதிபதி செயலகமும் பாதுகாப்பு அமைச்சுடன் உள்ளக,நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து செயல்படுத்தி வருகின்ற கிராம பாதுகாப்பு குழுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை(15) மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட (கமறெக்கும)முதல் ஆரம்பக் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி செயலகத்தின் கிராம பாதுகாப்பு  நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டீ.கமல் பத்மசிஸ்ரீ அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு இச்செயலமர்வினை முன்னெடுத்தார்.

அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உரையாற்றுகையில்...
இந்த கிராம பாதுகாப்பு குழுக்கூட்டமானது எமது மக்களுக்கு கிராம மட்டத்திலிருந்து பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய தேவையினை உணர்ந்து கொண்ட எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவில் உதயமானது.இதனை மாவட்டத்தில் சகல கிராமங்களிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை கிராம சேவை உத்தியோகத்தர்கள் மத்தியில் உள்ளது.

கிராம பாதுகாப்பு எனும் போது மக்களுக்கான பாதுகாப்பு , யானைத்தாக்கம்,டெங்கு பாதுகாப்பு,மது பாவனைக்கு அடிமையாகாமல் பாதுகாத்தல்,பொருளாதாரத்தினை நிலைபேறானதாக பாதுகாத்தல், என பல்வகையான விடயங்களையும் உள்ளடக்கியதாக பாதுகாப்புக்குழு, சுபீட்சத்தையும் கிராம மட்டத்தில் உருவாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சித்திட்டத்திற்கு நாட்டில் இயங்குகின்ற முப்படைகள் ,மற்றும் பொலிஸ், ஆகியோருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.இக்கூட்டத்திற்கு படைப்பிரிவுகளின் பிரதானிகள் கலந்து கொண்டனர்.அவர்களின் ஒத்துழைப்புகளுடன் கிராம சேவகர்கள் இணைந்து குழுக்கள் அமைக்க வேண்டியதையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாகவே இச்செயல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இவ்வாறான கிராம பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் (கமறெக்கும)ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.என பணிப்பாளர் நாயகம் எச்.டீ.கமல் பத்மசிஸ்ரீ தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சித்திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்கள்,மற்றும் கிராம சேவகர்கள்,பாதுகாப்பு படையினர்,பொலிஸ் அதிகாரிகள்,மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்,கலந்து கருத்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours