தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஹஷிம் ஆம்லா தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரராக களமிறங்கி அதிக அளவில் ரன் குவித்து இருக்கிறார். நீண்ட காலம் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வந்தார் ஆம்லா. இந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து, ஓய்வை அறிவித்துள்ளார்.
ரன் குவிப்பு
124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள ஹஷிம் ஆம்லா 9,282 ரன்கள் குவித்துள்ளார். இவரது டெஸ்ட் சராசரி 46.64 ஆகும். 181 ஒருநாள் போட்டிகளில் 8,113 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஒருநாள் போட்டிகள் சராசரி 49.46 ஆகும்.
பேட்டிங் சராசரி
டெஸ்ட் அரங்கில் 2004இல் அறிமுகம் ஆன ஹஷிம் ஆம்லா சிறந்த டெஸ்ட் வீரராக வலம் வந்தார். சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அங்கேயும் தன் முத்திரையை பதித்த ஆம்லா, ஒருநாள் போட்டிகளில் நீண்ட காலம் 50க்கும் மேல் ரன் சராசரி வைத்து இருந்தார்.
பார்ம் அவுட்
எனினும், கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் தடுமாறி வந்தார் ஆம்லா. அதனால் அவரது பேட்டிங் சராசரியும் வீழ்ச்சி அடைந்து வந்தது. உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான நிலைக்கு சென்ற ஆம்லா, 203 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஓய்வை அறிவித்தார்
பார்ம் அவுட் ஆனதோடு 36 வயதான நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ஹஷிம் ஆம்லா. அதே சமயம், அவர் உள்ளூர் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரிலும் பங்கேற்பார் என தெரிகிறது.
ஸ்டெய்ன் முடிவு
கடந்த சில நாட்கள் முன்பு தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஹஷிம் ஆம்லா தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மாற்றம்
மூத்த தென்னாப்பிரிக்க வீரர்கள் ஓய்வை அறிவித்து வரக் காரணம் அந்த அணியில் நடக்கும் மாற்றம் தான் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணி உலகக்கோப்பை தொடரில் படு மோசமாக செயல்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அணி அணியை ஒட்டு மொத்தமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. அதைத் தொடர்ந்தே வீரர்கள் ஓய்வு அறிவிப்பு வெளியாகி வருகிறது.
Post A Comment:
0 comments so far,add yours