(ரனா)
தேவைகளை உடைய மக்களுக்கு சேவைகளை மேற்கொண்டு கொடுப்பதில் கல்முனை றோட்டரி கழகம் முன்னின்று செயற்படுகிறது என்று இக்கழகத்தின் நடப்பாண்டுக்கான புதிய தலைவர் மதுவரி திணைக்களத்தின் கல்முனை பிராந்திய பொறுப்பதிகாரி றோட்டரியன் எஸ். தங்கராசா தெரிவித்தார்.
றோட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஆளுனர் றோட்டரியன் செபஸ்ரியன் கருணாகரன் தலைமையிலான பேராளர்கள் கல்முனை றோட்டரி கழகத்துக்கு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இருந்து கள விஜயம் மேற்கொண்டனர். இவர்களை வரவேற்று கௌரவித்தபோதே தலைவர் தங்கராசா இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை எஸ். எல். ஆர் ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தில் இவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான சேவைகளை நாம் இன்னமும் உன்னதமான முறையில் மக்களுக்கு வழங்க வேண்டும், இதற்கு கல்முனை றோட்டரி கழகத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும், உறுப்பினர்கள் ஓவ்வொருவரும் உரிய பங்களிப்புகளை இதற்கு வழங்க வேண்டும் என்றார்.
ஆளுனர் றோட்டரியன் கருணாகரன் பிரதம விருந்தினர் உரை ஆற்றியபோது கல்முனை றோட்டரி கழகத்தின் செயற்பாடுகள், பணிகள் ஆகியன மகிழ்ச்சி தருகின்றன, எதிர்காலத்தில் இன்னமும் வெகுசிறப்பாக இயங்க வேண்டும், காலத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்களை உள்வாங்கி செயற்படுவதன் மூலமே சாதனைகளை நிலைநாட்ட முடியும் என்று தெரிவித்ததுடன் நாடளாவிய ரீதியில் றோட்டரி கழகம் ஆற்றி வருகின்ற சமூக நல வேலை திட்டங்களை எடுத்துரைத்தார்.
இவ்வைபவத்தில் விசேட அழைப்பின் பெயரில் தமிழர் ஊடக மையத்தின் தலைவர் த. தர்மேந்திரா மற்றும் உறுப்பினர் பாக்கியராசா மோகனதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours