.
(டினேஸ்)

இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தினர் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் 

சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை நிருவாக சேவைகள் தரம் மூன்று பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 2018.07.01ம் திகதிக்கு முன்னர் அரச சேவையில் இணைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் ஐந்து சம்பள உயர்வுகளைப் பெற்றவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்ற தகமை வரையறுக்கப்பட்டுள்ளது.

 ஆனால் 2013ம் வருடத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சிங்களவர்கள் மற்றும் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆகியோருக்கே இந்த தகமை ஏற்புடையதாயுள்ளதுடன், அவர்களே இப் பரீட்சைக்குத் தோற்றமுடியும். ஏனெனில் வடக்கு கிழக்கில் அம்பாறை மாவட்டத்தைத் தவிர்த்து அப்போதைய அரசினால் நியமனம் வழங்கப்படும் போது 2013.07.02, 2013.07.09, 2013.07.14 ஆகிய திகதிகளிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டன.

 இந்த அடிப்படையில் ஐந்து வருடங்கள் பூர்த்தி என்பது வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் மற்றும் பதினான்கு நாட்கள் வித்தியாசப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களால் அப்பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.

 எனவே இந்த வர்த்தமானியில் குறிப்பிட்ட திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தாதவிடத்து வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் எவருக்கும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்பது தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தெரிவிக்கப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.


 இவ்விடயம் தொடர்பில் தான் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், திகதிகளை மாற்றம் செய்வதற்கான உடன்பாடு பிரதமரினால் எட்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தொடர்ந்தேர்ச்சியான கவனம் செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours