(க. விஜயரெத்தினம்)
பழைய நினைவில் நீலநிற ஆடையுடன் தமிழ் அரசு கட்சி கூட்டத்திற்கு முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வருகைதந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களிற்கு அரசியல் விளக்கமளிக்கும் இரண்டு கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை(12) மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களிலுமிருந்து கட்சியின் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டு, பிரச்சார நடவடிக்கைகள் நடைபெற்றது.
இதன்போது சுவாரஸ்யமான சம்பவமொன்று நடந்தது.பட்டிருப்பு தொகுதியில் காலையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
பட்டிருப்பு தொகுதியில் தமிழ் அரசு கட்சியின் புதிய பிரமுகராக இரா.சாணக்கியன் உருவாகியுள்ளார். சில வருடங்களின் முன்னர் வரை மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு பிரமுகராக செயற்பட்ட அவர் தமிழ் அரசு கட்சியின் பக்கம் தாவினார்.
சாணக்கியன் அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மட்டக்களப்பு செல்லும்போது இவர்களை தங்க வைத்து விருந்தளித்து, கட்சித் தலைமையுடன் நெருங்கியிருந்தார் என்பது உண்மையாகும்.
இதனால் “கட்சி தலைவர்களிற்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து, தேர்தலில் ஆசனம் பெறலாம்“ என மாவட்டத்தின் தமிழ் அரசு கட்சியினரிடம் அன்றைய சூழ்நிலையில் அதிருப்தியும்,சந்தேகமும் எழுந்திருந்தது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை(12) நடைபெற்ற கூட்டத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் நீலநிற மேற்சட்டையுடன் கூட்டத்திற்கு வந்திருந்தார். இதை அவதானித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர், சுதந்திரக்கட்சி கூட்ட நினைப்புடன் நீலநிற சட்டையுடன் வந்து விட்டீர்களா என சாணக்கியனிடம் கேள்வி கேட்டு, மஹிந்த முகாமில் இருந்து வந்துவிட்டு நீலநிற சட்டையுடன் இந்த கூட்டத்திற்கும் வருவது நல்லதல்ல என சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, நிகழ்வின் பாதியில் திடீரென சாணக்கியன் காணாமல் போயிருந்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் மேற்சட்டையை மாற்றி, வெள்ளை சட்டையுடன் கலந்து கொண்டார்.இன்று கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான
எம்.ஏ.சுமந்திரன்,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை,முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள்,பிரசபை உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours