(திருக்கோவில் நிருபர்)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய வளைவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை (12) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அக்கரைப்பற்று நாவற்குடாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவது, இன்று திங்கட்கிழமை அதிகாலை (12) 12.30 மணியளவில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருந்த வேளை தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய வளைவில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள வடிகானுக்குள் விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக திருக்கோவில் பொலிஸ் நிலைய அவசர அழைப்பு நோய்காவு வண்டியின் மூலமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட நிலையில் ஒருவர் பலியானதுடன் மற்றைய இளைஞன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலியான இளைஞன் அக்கரைப்பற்று நாவற்குடாவைச் சேர்ந்த 26 வயதுடைய ரவிச்சந்திரன் ரனுர்ஜன் என்றும் மற்றைய படுகாயமடைந்த இளைஞனான சு.அஜித்குமார் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours