(ரனா)
ஐ. தே. க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இராச்சியத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இப்போது மாத்திரம் அல்ல எப்போதுமே பூச்சியம்தான் என்று ஸ்ரீீீீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீீவு பிரதேச அமைப்பாளர் பொறியியலாளர் தேசமான்ய வீீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
புதிதாக அமைக்க உள்ள ஆட்சியில் அரசியல் தீர்வை நிச்சயம் வழங்கி வைப்பார்கள் என்று தமிழ் மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் வரவுள்ள தேர்தல்களை முன்னிறுத்தி சூறாவளி பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளார்கள். வர உள்ள தேர்தல்களுக்கான பிரதான கோஷமாக இதையே தூக்கி பிடித்து கொண்டு தமிழர் பிரதேசங்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்களும் சொந்த அரசியல் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டவர்களாக இக்கோஷத்துக்கு உரமூட்டுகின்ற தொழிலை செய்கின்றனர். பிரதமர் ரணிலின் அண்மைய யாழ்ப்பாண விஜயத்திலும் இவையேதான் நடந்தன.
சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த சட்ட வல்லுனர்களின் நேரடியான பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட அதிசிறந்த உன்னதமான தீர்வு பொதியை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக எரியூட்டி மகிழ்ந்து தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காமல் ஒரேயடியாக தடுத்து நிறுத்தியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சந்திரிகாவின் தீர்வு பொதி தமிழருக்கு கிடைத்து இருந்தால் முள்ளிவாய்க்கால் பேரழிவு அடங்கலாக எத்தனையோ சீரழிவுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று இருக்கவே மாட்டாது. கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு இரவு போதுமானது. பிரதேச செயலக பிரச்சினையை தீர்த்து தராமல் இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டு பிரச்சினையை தீர்த்து தருவார் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையுமே கிடையாது.
ஐக்கிய தேசிய கட்சி என்கிற வாகனத்தின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்ற வரை அந்த வாகனத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏறாது என்று முஸ்லிம்களின் பெருந்தலைவர் அஷ்ரப் முழங்கினார். அவருடைய காலத்தில் மு. கா ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேரவோ, ஆட்சி அமைக்கவோ இல்லை. அஷ்ரப்பின் அக்கொள்கையில் இற்றை வரை பற்றுறுதியுடன் இருப்பவராக அதாவுல்லாவை அடையாளம் காட்ட முடிகின்றது. ஆனால் தமிழ் தலைவர்களோ ரணில் விக்கிரமசிங்கவுக்கு எப்பொழுதும் ஆதரவு வழங்குவதையே பிறவி பலனாக கொண்டிருக்கின்றனர். என்னை பொறுத்த வரை ரணிலுக்கு மாத்திரம் அல்ல ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவே முடியாது. தமிழ் மக்களின் அறிவு பொக்கிசமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தை எரியூட்டியவர்களும் அவர்கள்தான். ஐக்கிய தேசிய கட்சியின் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு எதிரான இன கலவரம் நடந்தேறியது.
Post A Comment:
0 comments so far,add yours