மட்டக்களப்பு கல்வி வலயத்தால் 3ம் தவணை ஆரம்பத்தில் நடாத்தப்படும் பண்புசார் விருத்திக்கு முரணான பரீட்சைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதோடு அப்பட்டமாக சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் இப்பரீட்சைகள் அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகச் செய்தி மூலம் குற்றம் சாட்டியுள்ளார். 

பாடசாலை மட்டத்தில் வினைத்திறனாக இரண்டாம் தவணைப் பரீட்சை நிறைவு பெற்று மாணவர்களின் அடைவுமட்டம் தீர்மானிக்கப்பட்டுள்ள வேளை பாடசாலை 3ம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகிழ்ச்சியான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு குழப்ப நிலையை ஏற்படுத்தும் நிலையில் வலயத்தால் நடத்தப்படும் பரீட்சைகள் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த இரண்டாம் தவணையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் மன உழைச்சலுக்கு மத்தியில் சிறப்பான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளையில் மட்டக்களப்பு கல்வி வலயம் பரீட்சைப் பகுப்பாய்வுகளை நடாத்தியமையை சங்கம் வன்மையாகக் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசிரியர்கள் பல சிரமத்தின் மத்தியில் மூன்றாம் தவணை பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியுள்ள வேளையில் பண்புசார் விருத்திக்கு முரணாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞான பரீட்சை வினாத்தாள்கள் இருந்ததாகவும் மேலும் மாணவர்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக பரீட்சையை மையமாகக் கொண்ட செயற்பாடுகளால் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தரம் 09, தரம் 10 மாணவர்களின் அடைவு மட்டத்துக்கான பரீட்சைகளை வலயம் ஒழுங்கு செய்துள்ளதாகவும் இதனால் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்புசார் விருத்திக்கு முரணாக தயாரிக்கப்பட்டுள்ள பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளமையால் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு முடியாமல் திண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அதிகாரிகளின் தூர நோக்கற்ற வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தரமான கல்விக்கான செயற்பாடுகளும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் சீர் குலைந்துள்ளதாகவும் மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இப்பண்புசார் விருத்திக்கு முரணான பரீட்சை வினாத்தாள் மூலம் வலயம் பெருந்தொகையான பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளமை நல்லாட்சிக்கான சவாலாக அமைந்துள்ளதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours