பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்


ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான திரு. டேமியன் சூரி அவர்கள், 20/10/2019ம் திகதி நேற்றைய தினம், நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது சாவடைந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான Aubervilliers என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. 


பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் "கலைவண்ணம்" கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக "தங்கத் தமிழ் வேந்தன்" என்ற நாட்டுக் கூத்து மேடையேற்றப்பட்டு இருந்தது.

இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த  டேமியன் சூரி அவர்கள் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்தபடியே மேடையிலேயே உயிரையிழந்தார். 

இச்சம்பவமானது தமிழ் கலையுலகினர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயகத்தில் யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், குருநகர் இளைஞர் கலைக் கழகத்தின் மூலம் 1960களின் இறுதியில் கலையுலகிற்கு அறிமுகமாகியிருந்தார். 

அதன்பின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பங்கேற்றிருந்த இவர், 1980களில் தயாரிக்கப்பட்ட "பலிக்களம்" என்ற திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours