(க.விஜயரெத்தினம்)
மூன்று தசாப்த காலமாக நாம் அடைந்த இன்னல்கள் ஏராளம். ஆனால் பயனடைந்தது யார் என்று தமிழ்மக்கள் புத்திக்கூர்மையாக சிந்திக்க வேண்டும்.எங்கள் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட தமிழ்தலைமைகள் இன்று ஏமாந்த கோமாளிகளாக இருக்கின்றார்கள்.தட்டிக்கேட்பதற்கு பயம்.இனியும் அவ்வாறான நிலைமைகள் வராமல் இருக்கவும்,நாம் எம்மை ஆளுவதற்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்துள்ளார்.


1, கேள்வி:-கிழக்குத் தமிழர்கள் ஏன் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும்?
பதில்:-கிழக்குத் மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் கோத்தபாய ராஜபக்ஷவுக்குதான் அமோக ஆதரவு காணப்படுகின்றது.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் முற்று முழுதாக தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.புறக்கணிக்கப்பட்டார்கள்.ஏமாற்றப்பட்டார்கள்.கடந்த 72 வருடங்களாக கோஷித்தவற்றையே மீண்டும் மீண்டும் கோரிக்கைகளாக முன்வைத்துக்கொண்டு தமிழ்மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.இதனால் கிழக்கு தமிழர் பகுதிகள் சோமாலியா போன்று காட்சி தருகின்றது.எமது தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்மக்களை சரியான பாதையை வழிகாட்டவில்லை.தமிழ் அரசியல் தலைமைகள் காட்டிய பாதையில் ஒட்டுமொத்த தமிழ்மக்களும் படுகுழியில் வீழ்ந்து கொண்டு மீள எழும்ப முடியாமல் உள்ளோம்.இதனை யாதார்த்தமாக உணர்ந்துகொண்ட சிலர் படுகுழியிலிருந்து மீளலெழுந்து ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.நாங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.பலர் இன்னும் அறிவுபூர்வமாக சிந்திக்கவில்லை.கிழக்கின் நிலவரம் மோசமாக இருக்கு. தமிழ்மக்கள் வாழ்வதா அல்லது சாவதா அல்லது இருக்கின்ற இருப்பை தக்கவைத்துக் கொண்டு எஞ்சியுள்ள தமிழ்மக்களை பாதுகாப்பதா என்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.பழைய பல்லவிகளை தூக்கி வீசிவிட்டு எஞ்சியுள்ள தமிழ்மக்களையும்,அவர்களின் இருப்புக்களையும்,காணிகளையும் பாதுகாப்பதற்குரிய போராட்டத்தில் இருக்கின்றோம்.நாளுக்கு நாள் தமிழர்களின் காணிகள் சுவீகரிக்பட்டுக் கொண்டிருக்கின்றது.எமது மாகாணத்தின் அரச உயர் பதவிகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல்களை சற்று தமிழ்மக்கள் உன்னிப்பாக சிந்தித்து பாருங்கள்.இணக்க அரசியலை செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பால் தமிழர்கள் சாதித்தது ஒன்றுமல்ல.யார் கிழக்கில் ஆக்கிரமைப்பை செய்கின்றார்கள்.இன்றைய சூழ்நிலையில் கிராம ஆக்கிரமிப்பு,இனச்சுத்திகரிப்பு,நில ஆக்கிரப்பு போன்றன கிழக்கில் கேள்விக்குறியாகியுள்ளது.இதைப்பற்றி சிந்திக்கா விட்டால் கிழக்குத் தமிழர்களின் எச்சமும்  எஞ்சியிருக்காது.அதற்காகத்தான் நாங்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கனும்.கிழக்குத்தமிழர்களுக்கு முழுமையான அரசியல் அதிகாரம் தமிழர்களின் கையில் இருந்தால்தான் கிழக்கை மீட்க முடியும்.நாளுக்கு நாள் கிழக்குத்தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இன்று வேலைவாய்ப்புக்களை அதிக பணத்தை கொடுத்து தமிழர்கள் மாற்றுச்சமூகத்திடம் பெறுகின்றார்கள்.இந்நிலை மாறவேண்டும்.தமிழர்கள் வேலைவாய்ப்புக்களுக்காக அதிகபணத்தை மாற்றுச்சமூகத்திடம் கொடுத்து ஏமாந்து போயிருக்கின்றார்கள்.இதற்கு காரணம் தமிழ் தலைமைகளின் அரசியல் புலம் சரியில்லை.
தமிழர் பகுதிகளில் குறைவான நிதி ஒதுக்கப்பட்டு நிறைவான அபிவிருத்திகள் கிடைக்கவில்லை என்று தமிழ்மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றார்கள்.இதனால் கிழக்குத்தமிழர்களின் இருப்பை இனிமேல் காப்பாற்ற வேண்டும் என்றால் மாற்று அரசியல் பாதையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆகவே அந்த மாற்றம் வேண்டி தாமரை மொட்டுக்கு வாக்களித்து கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்குவதற்கு கிழக்குத்தமிழர்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை முற்று முழுதாக செய்து கொடுக்கப்படும்.தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனைகளுடன்  பாதுகாப்பான நாட்டை கோட்டபாய ஏற்படுத்தி தருவார்.சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் தமிழ்மக்களின் தமிழ்த்தலைமைகள் தமிழ்மக்களுக்கு பல உறுதிமொழியைக் கூறி செய்வோம் என்று சொல்லிய தலைவர்கள் இன்றுவரையும் செய்யவில்லை.இப்போதும் செய்து காட்டவில்லை.இனியும் தமிழ்த்தலைமைகள் சிந்தித்து செயற்பட வேண்டும்.யார் பக்கம் பிழை இருக்கின்றது பற்றி தமிழ்மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.இதனால் தூரநோக்கமற்ற அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.இதனை யதார்த்தமாக உணர்ந்து மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தால் தடைப்பட்ட அபிவிருத்தியை நாம் தொடர முடியும்.இதனால் விவசாயிகளுக்கான மானியம், ,கல்வி கலை கலாச்சார பொருளாதார அபிவிருத்தி,கிழக்கின் பாரம்பரிய கால்நடை வளர்ப்பு ஊக்குவிப்புக்கள்,சுகாதாரம்,சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள்,இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள்,மின்சார வசதிகள்,குடிநீர்,போக்குவரத்து வசதிகள், மேன்மையடையவுள்ளது.
மூன்று தசாப்த காலமாக நாம் அடைந்த இன்னல்கள் ஏராளம். ஆனால் பயனடைந்தது யார் என்று தமிழ்மக்கள் புத்திக்கூர்மையாக சிந்திக்க வேண்டும்.எங்கள் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட தமிழ்தலைமைகள் இன்று ஏமாந்த கோமாளிகளாக இருக்கின்றார்கள்.தட்டிக்கேட்பதற்கு பயம்.இனியும் அவ்வாறான நிலைமைகள் வராமல் இருக்கவும்,நாம் எம்மை ஆளுவதற்கும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரிக்க வேண்டும்.
2, கேள்வி:- மட்டக்களப்பு மாவடத்தின் தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தியை கோத்தபாய ராஜபக்ஷ முன்னெடுப்பாரா? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :-நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சை ஆதரிப்பதாக  தெரியப்படுத்திய செய்தியை இன்று  சகோதர தென்னிலங்கை சிங்கள மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியாக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.எதிர்வரும் தேர்தலில் 71வீத வாக்களிப்பை பெற்று கோத்தபாய ராஜபக்ஷ பெருபான்மையாக தெரிவு செய்யப்படுவார்.இத்தருணத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களும் மொட்டுக்கு வாக்களித்து மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்போம்.ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கிழக்குத்தமிழர்களை ஏமாற்றியுள்ளது.அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தமிழர்களின் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.வாழைச்சேனை காகித ஆலை,தேவாபுரம் அரிசி ஆலை,மண்டூர்,இலுப்பையடிச்சேனை ஓட்டுத்தொழிற்சாலைகள்,கும்புறுமூலை அரசாங்க அச்சகம்,வக்கியெல்ல நெல்களஞ்சியசாலை போன்றன மூடிக்கிடக்கின்றது.
72வீதம் தமிழர்களாக காணப்படுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களும்,கிராமங்களும் யுத்தவடுக்களுடன் காட்சி தருகின்றது.ஏனைய பிரதேசங்கள் முழுமையான அபிவிருத்தியுடன் காணப்படுகின்றது.இதற்கு காரணம் எங்களை வழிநடாத்திய தமிழ்தலைமைகள்தான்.சரியாகவும்,உறுதியாகவும் இருந்தால் மட்டக்களப்பை முன்னேற்ற முடியும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கிழக்கின் அபிவிருத்தியில் பாலங்கள் போடப்பட்டு,நெடுஞ்சாலைகள்,வீதிகள் புனரமைக்கப்பட்டு குளங்கள் மீள்புனரமைப்பு செய்தும்,பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் சிறப்படைந்து காணப்பட்டது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் அபிவிருத்திகள் தமிழர்பகுதிகளில்  பூச்சிமாகத்தான் இருக்கின்றது.பல பாலங்களுக்கு அடிக்கல் நாட்டியும் இன்னும் முற்றுப்பெறவில்லை.கடந்த நான்கு வருடங்களில் தமிழர்கள் அடைந்தது ஒன்றுமில்லை.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014ஆண்டு முதல் இன்றுவரையும் 2300 வேலையற்ற பட்டதாரிகள் வேலையில்லாமல் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் ஒரேநாளில் 57,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.எமது மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.இச்சிரமத்தை தவிர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் முறையான பொருளாதார திட்டங்கள் இல்லை.குழந்தைப்பிள்ளைகளுடன் 100 நாட்கள் தொடர்ச்சியாக வேலைவாய்ப்புக்காக போராடியும் பலனளிக்கவில்லை.இது சம்பந்தமாக மாவட்ட தமிழ்தலைமைகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவிப்பார்கள்.நாளை கிடைக்கும் என்று ரணில் விக்கிரமசிங்கவினால் தமிழ்தலைமைகளுக்கு தெரியப்படுத்தி ஏமாற்றுவார்.பல தடவைகள் பட்டதாரிகள் ஏமாற்றியதாக கூறுவார்கள்.ஆனால் மஹிந்த ராஜபக்ஷ சொல்வதை செய்யும் தலைவர்.அதனால் இன்று நாடுபூராகவும் அவருக்கு நல்ல மதிப்பு இருக்கு.இதனால் பட்டதாரிகளின் குடும்பத்தினர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கனும்.ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 பட்டதாரிகள் 45 வயதை தாண்டியுள்ளதால் வேலையில்லாமல் போன கதையும் இருக்கு.இவர்களின் வயதை கருத்திற்கொண்டு பிரதமர்,அமைச்சர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வேலையை வழங்கியிருக்கலாம்.இவ்வாறு பாதிக்கப்பட்ட 42 பட்டதாரிகளும் தமிழர்கள் தான்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக பட்டம் முடித்து வேலையில்லாமல் இருப்பது தமிழர்கள்தான்.ஏ.எல்,ஓ.எல் வரையும் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லாமல் இருக்கின்றார்கள்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடங்களை பூர்த்திசெய்திருக்கலாம்.ஏன் கிழக்கை பிரதமர் புறக்கணித்தார்.நல்லாட்சியை  செய்தவருக்கு ஏன் தமிழ்மக்கள் பற்றி கவனமில்லை.
நாட்டிலே யுத்தம் மௌனிக்கப்பட்டது.இதன்போது சிறைப்பிடிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 11,000பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தத்துணிவால்தான் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இன்று சிறையில் உள்ள 113 சிறைக்கைதிகளும் ரணில் விக்கிரமசிங்கவினால் ஏன் இதுவரையும்  விடுதலை செய்யப்படவில்லை.காரணத்தை தெளிபடுத்த வேண்டும்.இதுதான் மஹிந்தவுக்கும்-ரணிலுக்கும் இருக்கின்ற வேறுபாடு.113பேரையும் ரணிலால் விடுவிக்க முடியாது.கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் நிச்சம் விடுவிப்பார்.முன்னாள் ஜனாதிபதி தமிழ்மக்களுக்கு விட்ட தவறை உணர்ந்து கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் செய்யாதை தமிழ்மக்களுக்கு செய்து காட்டுவார்.தமிழ்மக்கள் மீது நல்லெண்ணம்,விசுவாசம், ஐக்கியம், சமாதானம் கொண்டு வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்.தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமையை நாட்டிலே ஏற்படுத்துவார்.எனவே தமிழ்மக்கள் சமாதான உணர்வுடன் சிங்கள மக்களுடன் இணைந்து வாழனும்.அப்போதுதான் எங்களுடைய எண்ணங்களையும்,எதிர்பார்ப்புக்களையும் மற்றும் அரசியல் அபிலாஷைகளை வெல்ல முடியும்.எதிர்ப்பு அரசியல் செய்து காட்டி தமிழ்மக்களை தமிழ்தலைமைகள் படுகுழியில் வீழ்த்தியிருக்கின்றார்கள்.இனியும் பசப்பு வார்த்தைகளுடன் எதிர்ப்பு அரசியல் வேண்டாம்.ஐக்கிய இலங்கைக்குள் சகோதர சிங்கள மக்களுடன் தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் ஆழ்வதற்கு வழிவகுப்போம்.
3,கேள்வி:-கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

பதில்:-கிழக்கு மாகாணத்தில் 58.9 வீதமாக வாழ்ந்த தமிழர்கள் இன்று 38.5 வீதமாக குறைந்திருக்கின்றார்கள்.கிழக்கு தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்தாலும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.இவற்றை சாதிப்பதற்கு சாணாக்கியமான பலமான தமிழ் அரசியல் தலைமைகள் எங்களுக்கு வேண்டும்.இன்னும் தூங்கிக் கொண்டு இருந்தால் தமிழர்கள் வாழ்ந்தற்கான மனித எச்சங்களும் காணமுடியாது.இனவாத,மதவாதத்துடன் தங்களின் அரசியல் சாணாக்கியத்தை தந்திரோபாயமாக கைக்கொண்டு செயற்படும் அரசியல்வாதிகள்தான் மும்முரமாக செயற்படுகின்றார்கள்.பொதுமக்களை நான் குறைகூறவில்லை.
உண்மையாக தமிழ்மக்கள் மீது விசுவாசம் இருந்தால் கல்முனை தமிழ்பிரதேச செயலகத்தை தரமுயர்த்திருக்க முடியும்.பிரதமர் ரணில்,சம்பந்தன்,ரவூப் ஹக்கீம் கூட்டுச்சேர்ந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தந்திருக்க முடியும்.ஏன் தரமுயர்த்த முடியாது.கணக்காளரையும் ஏன் நியமிக்கவில்லை.கணக்காளரை நியமித்தால் கணக்காளர் மாட்டுவாண்டியிலோ அல்லது நடந்தோ கல்முனைக்கு வந்திருக்க முடியும்.காணி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளுக்கு போய்விடும் என்று தெரிந்து இதனை ரணில் செய்யவில்லை.பசப்பு வார்த்தைகளை இனியும் தமிழ்மக்கள் நம்பத் தயாரில்லை.கோத்தபாய  ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கல்முனையை சகல அதிகாரங்களுடன் தர முயர்த்தி தருவதை மட்டக்களப்பில் வைத்து பொதுமக்கள் மத்தியில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ சொல்லியிருக்கின்றார்.இதுதான் இன்று கிழக்குத் தமிழர்களுக்கு தேவையான பேசப்படும் விடயமாகும்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் பொருளாதாரம் கிடப்பில் காணப்படுகின்றது.வசதி படைத்தவர்கள்,அரசாங்க உத்தியோகஸ்தர்களைத் தவிர வறுமைப்பட்ட தமிழ்மக்களின் பொருளாதாரம் சிக்கல் நிலையில் உள்ளது.ஒரேயொரு கூலித்தொழிலை செய்து கடனாளிகளாக எத்தனையோ குடும்பங்கள் வறுமையாக வாழ்கின்றது.34,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சி பூச்சியமாக உள்ளது.இவர்களின் முன்னேற்றம் பற்றி தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்க தவறிவிட்டது.இதனை கருத்திற்கொண்டு கிழக்கு தமிழர்களின் பிரதேசங்களில் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படவேண்டும்.ஆனால் தற்போதைய அரசாங்கம்,அரசாங்கத்தின் கைத்தொழில் அதிகாரசபையினால் கிண்ணியாவிலும்,சம்மாந்துறையிலும் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.இதுதான் தமிழ்மக்கள் நலன்சார்ந்த பிரதமரின் அபிவிருத்தி செயற்பாடு.இதுதான் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சாணாக்கியம்.இதைக்கேட்டால் நாங்கள் இனவாதி.தமிழ்தேசிய கூட்டமைப்பு வாய்மூடி மௌனிகளாக இருந்தால் இனநல்லிணக்கமாகும்.ஆனால் தமிழர்பகுதியையும் பிரதர் மறந்துவிட்டார்.கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சியில் வந்தால் கிழக்கில் தமிழர்களுக்கு ஏழு கைத்தொழில்பேட்டை உருவாக்குவதற்கு உறுதியளித்துள்ளார்.
அதேபோன்று நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திலும் தமிழர்பகுதியும் புறக்கணிப்பட்டுள்ளது.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கும் கல்முனையும்,சம்மாந்துறையும் தெரிவு செய்யப்பட்டது.இதேபோன்று பல விடயங்களில் குறிப்பாக வேலைவாய்ப்பு,கல்வி,சுகாதாரம்,உள்ளிட்ட பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.வடக்கு அபிவிருத்தி அமைச்சை வைத்திருக்கும் பிரதமர் ஏன் கிழக்கின் அபிவிருத்திக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சை தமிழருக்கு வழங்கவில்லை.இதுவும் தமிழ்மக்களை ஏமாற்றும்,திருப்தியளிக்காத செயற்பாடாகும்.இதனை கிழக்கு தமிழ் அரசியல்தலமை,பொதுமக்கள் உணராதவரை தமிழர்கள் பல்வேறு சாவாலுடன் வாழத்தான் வேண்டும்.இவ்வாறான சாவால்களை முறியடிப்புக்கு தமிழ்மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இருப்பைத் தொலைத்து இறப்பை சந்திக்க வேண்டும்.
4,கேள்வி:-கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதால் தமிழ்மக்களுக்கு என்ன இலாபம் கிடைக்கும்?

பதில்:-இன்று புத்திஜீவிகள், வர்த்தகர்கள்,துறைசார்ந்த வல்லுந‌ர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்காலத் திட்டமிடலுடன் தயாரித்துள்ளார்கள்.இவற்றில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.யுத்தத்தினால் உயிரிழப்புக்களையும்,உடமைகளையும் எமது மட்டக்களப்பு தமிழ்மக்கள் சந்தித்துள்ளார்கள்.இதனால் இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் வறுமையுடன் தனது எதிர்கால இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.இன்று தமிழ் தலைமைகளுக்கு வாக்களித்து ஏமாந்த சமூகமாக தமிழர்கள் இருக்கின்றார்கள்.சாப்பிடுவதற்குவசதியில்லாமல் மாற்றுச் சமூகத்தில் கையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள்.மாற்றுச் சமூகத்தின் கடைகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு மத்தியில் வேலைசெய்து தன் வயிற்றுப்பசியை போக்கி வருகின்றார்கள்.
இன்றைய சூழ்நிலையில் கிழக்கில் யுத்தத்தினால் உயிரிழப்புக்களை சந்தித்து நிர்க்கதியான 34,000 விதைவகளின் குடும்பத்தை முன்னேற்றுவது யார்.அவர்களின் எதிர்பார்ப்புகள்,வாழ்வாதாரம்,சுயதொழில்,பிள்ளைகளின் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் என்பன பல்வேறு விடயங்கள் நல்லாட்சி அரசாங்கதால் முழுமையாக செய்து கொடுக்கவில்லை.
இன்றைய இளைஞர்,யுவதிகளின் பிரச்சனை எனக்குத் தெரியும்.இளைஞர்களையும்,யுவதிகளையும் சரியான திட்டமிடலுடன் சவால்மிக்க தொழிநுட்ப யுகத்தில் முறையான தொழிற்பயிற்ச்சிகளையும்,திறன்களையும் கொடுத்து அவர்களுக்குரிய அடிப்படைப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமையைச் செய்யவேண்டும்.தரமான கல்வி கிடைக்காததால் அவர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளார்கள்.எனவே தரமான கல்வியை வழங்கி நாட்டினுடைய கல்விக்கு முன்னுரிமை கொடுத்து முதலீடு செய்ய வேண்டும்.உயர்தரம் படித்து பல்கலைக்கழக கல்வியை இழந்தவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் கலாசாலைகள்,கல்வியல்கல்லூரிகள் அமைத்து தரமான கல்வியை பெற்றுக்கொடுக்கப்படும்.
கைத்தொழில், தொழிற்பயிற்சிகள் வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தப்படவுள்ளது.உலக பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் நவீன,டிஜிட்டல் தொழிநுட்ப பயிற்சிகளை வழங்கி ஒரு மில்லியன் மேற்பட்ட டொலரை ஈட்டுவதற்குரிய வருமானத்தை கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியதும் பெற்றுக்கொடுப்பார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்தான் விவசாயிகளின் நன்மைகருதி உரமானியம் வழங்கப்பட்டது. விவசாயத்தில் உணவு உற்பத்தியை ஊக்குவித்து நாட்டின் வறுமை ஒழிக்கப்பட வேண்டும்.நாட்டின் உணவு உற்பத்திக்காக உரமானியங்களை கடனாக பெற்ற அனைத்து விவசாயிகளின் கடனையும் கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து இரத்துச் செய்வார்.நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ, பசுமைப்புரட்சிகளை செய்து வறுமைப்பட்ட மக்களின் பட்டினியைப் போக்கப்படவுள்ளது.பாற்பண்ணையாளர்களை சிறந்த திட்டமிடலுடன் ஊக்குவிப்பு நாட்டின் தேவைகளையும்,தங்குதடையின்றி நிறைவேற்றிக் கொடுப்போம்.
5.நீங்க ஏன் கோத்தபாய ராஜபக்ஷ மீது நல்லெண்ணம் வைத்தீர்கள்?
பதில்:-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்வதை செய்பவர்.செய்வதை தான் சொல்லுவார்.அதனால் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் சொன்னதை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு செய்து காட்டியுள்ளார்.அதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கோத்தபாய ராஜபக்ஷ மீது நல்லெண்ணம் தமிழ்மக்களுக்கு வந்திருக்கு.
அதனால்தான் கொழும்பை மஹிந்த ராஜபக்ஷ  முற்றாக அபிவிருத்தி செய்தாற்போல் மட்டக்களப்பையும் அபிவிருத்தி செய்து தந்திருக்கார்.மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்தான் கல்லடிப்பாலம்,மண்முனை பாலம்,கல்லாறுப்பாலம்,கோட்டைக்கல்லாறுப்பாலம்,பனிச்சங்கேணிப் பாலங்களை எமக்கு போட்டுத் தந்துள்ளார்.பொலநறுவை முதல் பொத்துவில் வரையும் காபட் வீதி போடப்பட்டுள்ளது.அதேபோல் நாடுபூராகவும் அபிவிருத்தி.இதனை யாரும் மறுக்கவோ அல்லது மறுதளிக்கவோ முடியாது.இன்னும் அச்சத்துடன் வாழாமல் நாங்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து மக்களும் ஒன்று திரண்டுள்ளார்கள்.இதனால் விரைவான போக்குவரத்துடன் பொருளாதார முன்னேற்றங்களும் இடம்பெற்று வருகின்றது.இதை செய்து காட்டியவர் மஹிந்த ராஜபக்ஷதான்.இவ்வேலைத்திட்டம் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தில் செய்து காட்டியுள்ளார்.இதனை இன்று அதிகமான மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நினைவுகூறி பேசுவதை கேட்கின்றோம்.வறுமைப்பட்ட மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவைத்தான் ஆதரிப்பதாக சொல்லுங்கின்றார்கள்.எங்களின் கஸ்டம் நீக்க வேண்டுமானால் கோத்தபாய ராஜபக்ஷவால்தான் முடியும்.

ஆனால் இன்று பட்டிருப்பு தொகுதியில் உள்ள மண்டூர்-குருமண்வெளி பாலத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள்,அமைப்பாளர்கள் கட்டிக்கொடுக்க முடியாமல் உள்ளார்கள்.இப்பால வேலைக்காக 11தடவைகள் பூமாலைகள் போட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.இதில் அமைச்சர் லக்ஷமன் கிரியல்லவினாலும் நாட்டிவைக்கப்பட்டது.பெயர்பலகையும் சும்மா இருக்கு.இவ்வாறு இப்பிரதேச மக்கள் ஐக்கிய தேசிய கட்சியினரையும்,தமிழ்தேசிய கூட்டமைப்பினரையும் வெறுப்புடன் பார்கின்றார்கள்.
இதேபோன்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரான்புல்சேனை அனைக்கட்டு 7தடவைகள் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம்,கிழக்கு மாணசபை உறுப்பினர்கள் பங்குபற்றி அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்கள்.அடிக்கல் நாட்டிய இடத்தில் புல்,பற்றைகள் முளைத்துள்ளது.அந்த இடம் அடிக்கல் நாட்டியவர்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது.தமிழ்தேசிய கூட்டமைப்பும்,ஐக்கிய தேசிய கட்சியினரும் கிழக்கிலும்,மட்டக்களப்பிலும் இதைச் செய்துள்ளார்கள்.ஆனால் ஓட்டமாவடி,ஏறாவூர்,காத்தான்குடிக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு இன்று  அபிவிருத்தி அடைந்திருக்கு. ஒரு டூபாய் நாடுபோல் காட்சியளிக்கின்றது.இதைக் கேட்டால் தமிழ்தலமைகள் எங்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவார்கள்.அல்லது போலி முகப்புத்தகத்தில் இணையத்தளத்தில் போட்டுக்கிழிப்பார்கள்.யார் துரோகிகள்?இப்படி தமிழர்கள் ஆளுக்காள் குறைகூறிக்கொண்டு தமிழ்பிரதேசங்கள் சோமாலியா போன்று காட்சி தருகின்றது. இப்படி துரோகி என்று சொல்லிக்கொண்டு மாற்றுச்சமூகம் அபிவிருத்திஅடைவதற்கு மூலாதாரமாக செயற்படுவர்கள்தான் தமிழ்தலைமைகள்தான்.தமிழ்மக்களை சரியான பாதைக்கு வழிகாட்டுங்கள்.தமிழ்மக்களுக்கு இழைக்கபடும் அநீதிகளை தட்டிக்கேட்காமல் தமிழ்தலைமைகள் மாற்றுச்சமூகத்தை வாழவைக்குது.
கோத்தபாய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனத்தில் வறுமைப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது.சுகாதாரம்,கல்வி,குடிநீர்,உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு அவர் என்னிடம்  உறுதியளித்தார்.எனக்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.ஜனாதிபதியாக கோத்தபாய தெரிவு செய்யப்பட்டால் மாவட்டத்தில் 7தொழிற்சாலை அமைத்து பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வறுமை போக்கப்படும்.இளைஞர்,யுவதிகளின் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
நீங்க மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதால் இந்த நாட்டையும்,மட்டக்களப்பையும் சௌபாக்கியமான நாடாக கட்டியெழுப்ப முடியும்.அதனால் நாம் அனைவரும் தலை நிமிர்ந்து வாழ முடியும்.இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் பாங்காளியாக மாறுங்கள் எனத் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours