சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதனைக் கண்டித்து சாய்ந்தமருது பிரதேசத்தின் சிவில் அமைப்புகள் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னால் லுஹர் தொழுகையை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தரும் போது குறித்த பகுதிக்கு வருகை தந்த சிலர் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து இளைஞர்கள் சிலரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையிலேயே இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இங்கு கூடியிருந்த இளைஞர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியான நியாயமான தேர்தல் சாய்ந்தமருதில் நடத்தப்பட வேண்டும், கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களை தாக்கிய குண்டர் குழுவை கைது செய்ய வேண்டும், தேர்தல் பிரசாரங்களின் போது அரச சொத்துக்களை பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours