கிழக்குத் தமிழர்களின் இருப்பைக் காப்பாற்ற வடக்குத் தமிழர்களும் 'தாமரைமொட்டு'க்கே வாக்களிக்க வேண்டும்.என தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்  கிழக்குத்தமிழர் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.


அவர் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்து இவ் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

கடந்த எழுபது வருடகாலமாகத் தமிழரசுக்கட்சியும் - பின்னர் வந்த தமிழர் விடுதலைக்கூட்டணியும் - தற்போது 'தமிழரசுக்கட்சி' வடிவம் எடுத்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் போராட்ட அரசியல் என்கின்ற போர்வையில்  கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் தங்களது ஏகாதிபத்திய சார்பு எஜமானனான ஐக்கிய தேசியக்கட்சியிடமும் 'அடமானம்' வைத்துத்தான் தங்கள் பாராளுமன்ற அரசியல் வியாபாரத்தை வெற்றிகரமாக நடாத்தி வந்துள்ளன. 
இந்த அரசியல் வியாபாரத்தில் சில தனிநபர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள, கிழக்குத்தமிழர்கள் தங்கள் வயற்காணிகளை இழந்தார்கள்; வாழ்விடங்களை இழந்தார்கள்; வணக்கத்தலங்களை இழந்தார்கள். பொருளாதாரக் கட்டமைப்புகளை இழந்தார்கள். கலாசார விழுமியங்களையும் அடையாளங்களையும் இழந்தார்கள். இப்படியே இழந்து இழந்து இன்று தங்கள் இருப்பையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல கல்முனை விவகாரத்தை எடுத்துக்காட்டலாம்.
கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் இந்த மிகப் பெரிய ஆபத்தை 'தாயகக் கோட்பாடு' என்றும் 'வடக்குகிழக்கு இணைந்த மாநில சுயாட்சி' என்றும் கோசங்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்கின்ற வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக்கட்சிகளும் வடக்கின் 'தமிழ் அரசு'வாதிகளும் அவர்களுக்கு வால்பிடிக்கும் கிழக்கின் 'தமிழ் அரசு' வாதிகளும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது இந்தத் 'தமிழ் அரசு' வாதிகளுக்கு மக்களின் நலன்களைவிடத் தங்கள் கட்சிகளின் நலன்களும் தங்கள் சொந்த நலன்களுமே முக்கியமாகத் தெரிகின்றன. மக்களை ஏமாற்றும் இத்தகைய வஞ்சக அரசியலின் உச்சக்கட்ட வெளிப்பாடே கிழக்குத் தமிழர்களின் அரசியல் களநிலையைக் கணக்கிலெடுக்காமல் தமிழரசுக்கட்சியும் அதற்குத் தலையாட்டுகின்ற 'ரெலோ'வும் 'புளொட்' உம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்பிரேமதாசாவை ஆதரிக்க எடுத்துள்ள தீர்மானம் ஆகும். 
இந்தத் 'தமிழ் அரசு' வாதிகள் எதையாவது செய்து தொலைக்கட்டும். இவர்களைத் திருத்தவும் முடியாது. அவர்களாகத் திருந்தப் போவதுமில்லை. மக்கள்தான் மனம்மாறவேண்டும். மக்கள்தான் தாமாகத் திருந்தவேண்டும்.
இன்றைய கிழக்கின் களநிலையில் தமிழர்கள் சஜித்பிரேமதாசாவுக்கு வாக்களிப்பது ஒப்பிட்டுரீதியில் தற்கொலைக்குச் சமனாகும். தங்கள் தலையிலே தாங்களே மண் அள்ளிப் போடுவது போலாகும். கிழக்கைப் பறிகொடுத்துவிட்டுப் பின் வடக்கோடு எதனை இணைப்பது? இல்லாத ஒன்றை எப்படி எதனோடு இணைப்பது? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் பண்ணமுடியுமா? இதை உணரமுடியாத அல்லது உணரமறுக்கின்ற 'தமிழ் அரசு' வாதிகளை என்ன செய்வது? கிழக்குத் தமிழர்களின் வாஞ்சைக்குரிய வடக்குத் தமிழர்களிடம் ஒரு விநயமான வேண்டுகோள். 'தமிழ் அரசு' வாதிகளை விட்டுத்தள்ளுங்கள். மக்கள் நீங்கள் முடிவெடுங்கள். பெருவாரியான கிழக்குத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 'தாமரைமொட்டு'க்கு மட்டுமே வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். 
கிழக்குத் தமிழர்களின் இருப்பைக்காப்பாற்ற வடக்குத் தமிழர்களும் உதவவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே வடக்குத்தமிழர்களே! நீங்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்குத் தமிழர்களுடன் இணைந்து 'தாமரை மொட்டு'க்கு மட்டுமே வாக்களித்துக் கிழக்குத் தமிழர்களின் எதிர்கால இருப்பைக் காப்பாற்ற உதவுங்கள். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours