(துதி)
தமிழ் மக்கள் தேர்தலை எந்தக்காரணம் கொண்டு பகிஸ்கரிக்ககூடாது என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தேர்தல் தினத்தன்று அதிகளவான தமிழ் மக்கள் வாக்களித்து நமது பலத்தினை நிரூபிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதிப் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் பூர்த்தியடையும் நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் வகையிலான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இன்று காலை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தேர்தல் பிரசாரப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திகுரமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இறுதி நாளான இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது கி.துரைராஜசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் அனைத்து பகுதிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோசமும் எழுந்தது. அது எழுந்த மாத்திரத்தில் அணைந்துவிட்டது. எமது பகுதிகளில் அவ்வாறான பிரசாரங்கள் இல்லை. எமது பகுதி மக்கள் தேர்தலை எக்காரணம் கொண்டு பகிஸ்கரிக்காமல் வாக்களிக்க வேண்டும். அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் சகோதர இனமான முஸ்லிம் இனம் அதிகளவான செல்வாக்கினைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை முறியடிக்ககூடிய வகையில் தமிழ் மக்களின் வாக்குகள் தான் இங்கு அதிகமாக கிடைத்தது என்று சொல்கின்ற அளவிற்கு வாக்குப் பதிவினைக் காட்ட வேண்டிய கடமைப்பாடு தமிழர்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்த அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து அடுத்த ஜனநாயகம் சார்ந்த ஜனாதிபதியை தெரிவுசெய்யவேண்டும்.
கோத்தபாயவுக்கு இந்த வாக்குகள் அளிக்கப்படுகின்ற போது மீண்டும் இருண்ட யுகம்தான் வரும் என்பதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours