(க. விஜயரெத்தினம்)
தமிழ்மக்களின் உரிமைக்காகவும்,இனப்பிரச்சனைக் கான நிரந்தர அரசியல்தீர்வு கிடைப்பதற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ்மக்களுக்கு உரிமையுண்டு என ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி உறுதிமொழி வழங்கிய சஜித் பிரேமதாசவை தமிழ்மக்காள் நூறூவீதம் வாக்களித்து ஜனாதிபதி ஆக்கி காட்டுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு துளசி மண்டபத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்கும் பரப்புரைக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் திங்கட்கிழமை(11)மாலை இடம்பெற்றது.
தொடர்ச்சியாக உரையாற்றும் போது...
இது சாதாரணமான தேர்தல் அல்ல.ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ்மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்.பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது என்பதற்கான நடைபெறும் தேர்தலாகும்.எமக்கு சாதகமான விளைவுகளை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஜனாதிபதி வேட்பாளரின் ஆளுமையை கருத்திற்கொண்டு நாம் தெரிவு செய்துள்ளோம்.
இந்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறப்போகின்றது.இத்தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றார்கள். இப்போட்டி முக்கியமாக இரண்டுபேருக்கு இடையில் நிலவுகின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சவுக்கும் இடையிலேயே இந்த போட்டி நடக்கின்றது.
இவர்களின் ஒருவர்தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம்.ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் பங்குபற்றுவதா இல்லையா? என்பது முதல் கேள்வி. இது தொடர்பில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வட,கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பங்கு கொள்ளவில்லை. இதனால்தான் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மீண்டும் நாம் அதே தவறை விட்டு கோட்டாவை வெற்றியாளராக்கக்கூடாது.
அவருடைய ஆட்சியின் கீழ் 2005 தொடக்கம் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற துயரச்சம்பவங்களை பற்றியும், அதனால் மக்கள் அனுபவித்த துன்பங்கள் துயரங்களை பற்றி நான் கூற வேண்டியதில்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.அக்காலத்தில் இவ்விதமான கஸ்டத்தை தமிழ்மக்கள் அனுபவித்தார்கள்.தமிழ்மக்கள் நியாயமாக சிந்தித்து எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி எமது இலக்கு அடையப்படவேண்டும்.
அரசியல் சாசனத்தை மாற்றி தேர்தலில் எத்தனை தடவையும் போட்டியிடலாம் என மாற்றியமைத்து விதியை தன்னகத்தே உருவாக்கி மூன்று தடவைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார்.சர்வதிகார ஆட்சியுடன் உச்ச நீதிமன்றத்தையும் கையகப்படுத்தி மூன்று தடவைகள் போட்டியிடலாம் என தீர்ப்பை மாற்றியமைத்தார்.இதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை.
இன்று பிள்ளையானுக்கு இவ்விதமாக மஹிந்த ராஜபக்ஷ அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று தமிழர்கள் சிந்தித்து கொள்ளவேண்டும்.தமிழர்களை அடக்கி,அடிமைப்படுத்தி வைப்பதற்கே இவ்விதமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.பல்லின சமூகம் வாழ்கின்ற இந்த நாட்டில் தமிழ்மக்களை அடக்கி,அடிமைப்படுத்தி அதிகாரங்களை குறைத்து நாட்டின் தலைவர் செயற்படமுடியாது.
13ஆவது அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து அதிகாரிகளையும் குறைத்து செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்மக்கள் நம்பத் தயாரில்லை.அவரின் தலைமையில் வாரிசாக வந்த கோத்தபாய ராஜபக்ஷ தமிழ்மக்களிடம் என்னை நம்புங்கள்,நம்பி எனக்கு வாக்களியுங்கள் எனக்கூறுவதில் தமிழ்மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.இதற்குத்தான் தமிழ்மக்கள் தமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்தி சஜித்தை ஜனாதிபதி ஆக்கி தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் பெறுவதற்கு வழிசமைப்போம்.
அந்த தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுத்து, சிந்தித்து வாக்களித்திருந்தால் அந்த நிலமை ஏற்பட்டிருக்க வேண்டி அவசியம் இல்லை.ஜனாதிபதி பதவி சாதாரணமான பதவி இல்லை. அதியுச்ச நிர்வாக அதிகாரம் அவரிடம்தான் உள்ளது. அரசின் தலைவர். அமைச்சின் தலைவர். எவ்வாறான அமைச்சு இருக்க வேண்டும் என்றும், எந்த அமைச்சுக்கு எந்த கருமங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பவர் அவர். நீதிமன்றங்களாக இருக்கலாம், பொதுச் சேவை, பொலிஸ் சேவை, இராணுவ சேவை தொடர்பில் நியமனங்களை ஜனாதிபதிதான் செய்வார்.
இவ்வாறான அதிஉச்ச அதிகாரம் கொண்டவர் யாராக இருக்க வேண்டும் என்பதை தெரிவு செய்ய வேண்டிய பங்கு எங்களிடம் உள்ளது.
சஜித் பிரேமதாசவும், கோத்தாபாய ராஜபக்சவும், ஆட்சிப் பொறுப்புக்களில் இருந்திருக்கின்றார்கள். அவர்களின் சரித்திர கோவை எங்களிடம் உள்ளது. நடைபெற்ற அசம்பாவிதங்கள், மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போனவை போன்ற மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் எமக்கு தெரியும்.
இவற்றுக்கொல்லாம் யார் பொறுப்பாளிகள் என்றும் எமக்கு தெரியும்.எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டார்கள். யார் கொலை செய்தார்கள் என்று எவருக்கும் தெரியாது.
மாணவர்கள்,ஊடகவியலாளர்கள், மனித உரிமைக்காக உழைத்தவர்கள், சாதாரண பிரஜைகள் கொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறான ஒரு ஆட்சி மீண்டும் ஏற்க நாம் இடம் கொடுக்கப் போகின்றோமா? அவ்வாறான ஒரு பாதகமான நிலை மீண்டும் உருவாக சந்தர்ப்பம் உள்ள போது, அதனை தடுப்பதற்கான பங்களிப்பு எங்களுக்கு இல்லையா?
சஜித் பிரேமதாசாவை பொறுத்தவரையில் அவரை ஒரு துவேசவாதியாக நான் கருதவில்லை.இனவாதியுமல்ல.இனத்து வேசியுமல்ல.அவரை நீண்ட காலமாக எமக்கு தெரியும். அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அந்த ஒற்றுமையின் அடிப்படையில் நாடு முன்னேற்றமடைந்து, மக்கள் அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பது தனது திடமான நிலைப்பாடு என்றும்,ஈழத்தை தவிர எல்லாத்தையும் தருவேன் என்றும்,அதியுச்ச அதிகாரப்பகிர்வு,மாகாணங்களுக்கா ன அதிகாரம்,கல்வி சுகாதாரம் விவசாயம் நீர்ப்பாசனம் காணி பொலிஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுமென்றும், எமது மக்களின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு தமிழ்மக்கள் அனைத்து உரிமைகளுடன் வாழ்வார்கள் என கூறியுள்ளார்.
அதியுச்ச அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கு தான் தயாராக உள்ளார் என்றும் கூறியுள்ளார். இதனை பற்றி நான் அதிகம் பேசவில்லை. அவ்வாறு நான் பேசினால் அந்த கருத்துக்கள் தென்பகுதியில் தப்பான விதத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம்.
கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகார பகிர்வு தொடர்பில் எவையும் கூறப்படவில்லை. நாங்கள் செய்த தவறுகளை தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் அவ்வாறான தவறுகள் நடக்காது என்றும் கூறவில்லை.அவர்கள் கூறுகின்றார்கள் நடந்ததை மறந்துவிட்டு வாருங்கள் நாங்கள் ஒன்றாய் கூடி ஒரு பயணத்தை செய்வோம் என்று. எங்கே கூட்டிக் கொண்டு போகப் போகின்றாரோ தெரியவில்லை.
கடந்த கால நிலைப்பாடு, அவர்களின் சரித்திர கோவை, அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பவற்றை பார்த்தால் நாங்கள் ஒரு முடிவை எடுக்கலாம்.இப்போது கூறுகின்றார்களாம் தமக்கு சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் தேவை இல்லை. பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளால் மட்டும் தாங்கள் வெல்வோம் என்று. உண்மையிலேயே அவ்வாறு கூறினார்களோ எனக்கு தெரியவில்லை.ஏலும் என்றால் செய்யுங்கள். பெரும்பான்மை இனத்தவரின் வாக்குகளை மட்டும் வைத்து வெல்லுங்கள்.
எம்மை மிரட்டி, எம்மை அதட்டி நீங்கள் எதனையும் அடைய முடியாது. அதனை அடைவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாங்கள் ஒரு தீர்மானத்தை விடுத்து. ஒன்றுமையான தம்பி சிவாஜிலிங்கத்திற்கு என்னை நன்றாக தெரியும். அவரையும் நான் நன்றாக அறிந்தவன். அந்த வகையில் அவரிடம் நான் அன்பாக கேட்டுக் கொள்ளுகின்றேன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு. என்னுடைய கோரிக்கையை அவர் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்.
நாங்கள் எல்லோரும் ஒருமித்து ஒன்றுமையாக எமது தீர்மானத்தின் அடிப்படையில் யாருடைய வெற்றி எமக்கு பாதகமில்லாமலும், எமக்கு சாதகமானதுமாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அன்பாகவும் தாழ்மையாகவும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
முன்னர் பதவியில் இருந்து, இப்போது பதவி இல்லாமல் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் கூறுகின்றார்கள் பதவியை எவ்விதத்திலும் பெற்றுவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்.
நாங்கள் கடும் போக்கு வாதிகள் இல்லை. சமாதானமாக பேசி பெறக்கூடியதை பெற்று வெல்லப் போகும் கோத்தாவிற்கு ஆதரவு கொடுக்குமாறு கோருகின்றார்கள்.நாங்கள் பிச்சை வேண்டுபவர்கள் இல்லை.தந்தை செல்வாவால் தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது பிச்சை வாங்குவதற்காக கட்சி ஆரம்பிக்கப்படவில்லை. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிய போது பிச்சை வாங்குவதற்காக போராடவில்லை.இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மக்களின் உரிமைக்காகவும்,இனப்பிரச்சனைக் கான நிரந்தர அரசியல்தீர்வு கிடைப்பதற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ்மக்களுக்கு உரிமையுண்டு என ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி உறுதிமொழி வழங்கிய சஜித் பிரேமதாசவை தமிழ்மக்காள் நூறூவீதம் வாக்களித்து ஜனாதிபதி ஆக்கி காட்டுங்கள்.
உங்களுக்கு பதவிகள் வேண்டுமென்றால் நீங்கள் பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.தமிழ் மக்களை விற்று பதவிகளை பெற வேண்டாம்.அதற்கு உங்களுக்கு உரித்து இல்லை.
தமிழ் மக்கள் 98 வீதமாக வாக்களித்தால் எமது தேவைகள் நிறைவேற்றப்படும். இந்த ஜனாதிபதி தேர்தலும் தமிழர்களின் போராட்டத்தின் இன்னும் ஒரு அடியாகும். அவ்வாறுதான் நாங்கள் பார்க்கின்றோம்.எதிர் கொள்ளுகின்றோம்.
பலருடன் பேசியுள்ளோம். அதை கூற நான் விரும்பவில்லை.அதிஉச்ச அதிகார பகிர்வுடன் கூடிய ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். தமிழ் மக்கள் பாதுகாப்பாக, சகல உரிமைகளையும் பெற்று, கௌரவத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ உரிய தீர்வினை பெறுவோம். இதற்கான கனிசமான தூரம் நாங்கள் பயணித்துவிட்டோம். அதை பெற்றுக் கொள்ளும் வாசலில் நாங்கள் நின்கின்றோம். இதற்காக உறுதியாக ஒன்றுமையாக நிற்க வேண்டும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours