(துதி)
வடக்குகிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தச் செய்தியினை அல்லது அவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.



நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோகமான வாக்களிப்பினை மேற்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், புதிதாக நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



இலங்கையின் 08வது ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ள திரு.கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நடைபெற்று முடிந்த குறித்த இந்தத் தேர்வுக்கான ஜனாதிபதித் தேர்தலிலே வடக்குகிழக்கு மக்கள் குறிப்பாக நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அமோகமாக வாக்களித்திருக்கின்றார்கள். 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை பின்தள்ளியவர்களாக வடக்குகிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். 

இன்னுமொரு செய்தியாக தென்னிலங்கையில் நான்கு லெட்சம் அளிவில் வாக்குச் சரிவு ஏற்பட்டிருக்கின்ற அதேவேளையில், எமது மக்களின் வாக்களிப்பு வீதம் பாராட்டத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதற்காக எமது மக்களுக்கு எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், எமது ஏனைய ஆதரவாளர்கள் உட்பட அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட எமது அருமை வாக்காளர்கள் எல்லோருக்கும் இந்த நன்றிகள் உரித்தாகட்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் பிற்பகல் ஒரு மணிவரை மந்தகதியில் இருந்த வாக்களிப்பு வீதத்தைத் திடீரென உயர்த்தி எல்லோரது கவனத்தையும் நமது மாவட்டத்தின்பால் ஈர்த்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.



வடக்குகிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலிலே நமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தச் செய்தியினை அல்லது அவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம். இனி நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியிலே மக்களுடைய ஆணையை மதித்து புதிய ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டின் சகல பாகங்களுக்கும் சுபீட்சம் அளிக்கும் வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு, எமது மக்களுக்கு மீண்டும் நன்றியையும் நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி அவர்களுக்கு மீண்டும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours