(க.விஜயரெத்தினம்)
தீபாவளி தீர்வுகளை இல்லாமலாக்கிய பெருமைகள் அனைத்தும் ராஜபக்ஷவினரே சாரும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு(12) தெரிவித்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பின் பெருந்தலைவரான இரா.சம்பந்தன் ஐயா 2015இல் இருந்து தீபாவளிக்கு தீர்வு வரும் என்று சொல்லி ஏமாற்றி வருவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் நம்புவதில் பிரயோசனம் இல்லையென்றும் நாமல் ராஜபக்ஷ தேர்தல் மேடைகளில் பேசி வருகின்றார்.
தீபாவளி தீர்வுகளை இல்லாமலாக்கிய பெருமைகள் அனைத்து அவருடைய தந்தை மஹிந்த ராஜபக்ஷவையே சேரும்.அவர்கள் தான் தீர்வுகள் மற்றும் புதிய அரசியலமைப்பை எதிர்த்து தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கும், அரசியலமைப்பிற்கும் எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டவர்கள்.
இப்போது இவ்வாறு மேடையில் பேசுவது நகைப்பிற்குரியதாகவே உள்ளது.
பத்து வருடங்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து தமிழ் மக்களுக்கு செய்தவை என்ன? ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், வெள்ளைவான் கலாசாரம் என்பவற்றையே தமிழ் மக்கள் அனுபவித்து வந்தனர்.அதுமட்டுமில்லாமல் 2018நவம்பர் மாதம் பாராளுமன்றத்தினூடாக அரசியலமைப்பு விவாதிக்கப்பட இருந்த தருணத்தில் 2018 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற கலகத்தை ஏற்படுத்தி அதனை இல்லாமல் செய்தவரும் மஹிந்த ராஜபக்ஷ தான்.
தமிழ் மக்களின் அரசியல் சாணக்கியத்தினாலே 2015ம் ஆண்டு அவர்களுடைய குடும்ப ஆட்சிக்கு முற்று புள்ளி வைத்தனர்.2015ன் பின்னரே இளைஞர்கள் புலனாய்வு பிரிவினரின் கெடுபிடி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனவும்,
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கும் வியாழேந்திரனை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தமையும் இவ்வாறான காரணங்களேயாகும். விவாதத்திற்கு அழைத்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் இதுவரைக்கும் எதுவிதமான பதில்களும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.
இதை வைத்துகொண்டு மட்டக்களப்பு மக்கள் இவருடைய செயற்பாடுகளையும், இவரையும் ஆதரவு வழங்கும் இவர்சார்ந்த கட்சி பற்றியும் தெளிவாக அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours