அன்னத்துக்கு வாக்களித்தால் தமிழ் மக்கள் அன்னக் காவடியாகத்தான் மாற நேரும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான தொழிலதிபர் சிவக்கொழுந்து  அகிலதாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்த இவர் கல்முனையில் தமிழர் ஊடக மையத்தின் பிரதிநிதிகளை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேசியபோது தெரிவித்தவை வருமாறு:-

அன்ன பறவைக்கு அபூர்வமான நல்ல இயல்புகள் பல இருப்பதாக பழைய கதைகளில் கற்பனைகளாக சொல்லப்பட்டு இருக்கின்றன. பாலில் கலந்து உள்ள நீரை பிரித்து பாலை மட்டும் அது குடிக்கும் பண்பை கொண்டது என்பது இவ்வாறான கற்பனைகளில் ஒன்றாகும். இவை போலவேதான் அன்னத்தின் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிறேமதாஸவை நல்லவர் என்றும் வல்லவர் என்றும் புளுகி தள்ளுகின்றனர். அவற்றை எல்லாம் நம்பி வாக்களித்தால் தமிழர்கள் அன்னக் காவடிகளாகவேதான் மாற நேரும்.

இந்துக்களின் நம்பிக்கையின்படி வழிபாடுகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு உள்ள கடவுளாக பிரமா உள்ளார். விஷ்ணுவும், பிரமாவும் அடி, முடி தேடி சென்ற கதை தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.  முடியை தேடியவராக அன்ன பறவையாக மாறி சென்ற பிரமா முடியை கண்டு விட்டதாக பொய் சொல்கின்றார்.  முடியில் இருந்து விழுந்த தாழம்பூவை இதற்காக பொய் சாட்சியம் சொல்லவும் வைக்கின்றார். பொய் சொன்ன காரணத்தாலேயே அதன் பின் பிரமாவுக்கு பூசை வழிபாடுகள் இந்த உலகத்திலே எங்குமே மேற்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பிரமாவின் வாகனமாகவும் அன்னம்தான் சொல்லப்பட்டு இருக்கின்றது. அந்த பிரமாவின் அம்சமாகவேதான் சஜித் பிரேமதாஸ மக்கள் முன்னிலைக்கு வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுகின்றார். அவருகாகா பொய் சாட்சியம் சொல்கின்ற பணியில் ஒரு கூட்டம் அவருடன் எப்போதும் ஒட்டி நிற்கின்றது. ஆனால் அவரும் மக்களால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்படுவார். அந்த நாளை எமது தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாள சின்னங்களில் ஒன்றாக அன்னம் உள்ளது. விகாரைகளில் காணப்படுகின்ற அலங்காரங்களில் இது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. ஆகவேதான் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைமைகள் பேரினவாத வாக்காளர்களை கவர்வதற்காக மாத்திரம் அன்னத்தை சின்னமாக்கி முன்னால் வந்து நிற்கின்றார்கள். சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை இன மக்களிடம் இருந்து நிரந்தரமாக பிரித்து அன்னியப்படுத்தி வைத்திருப்பதற்கான அன்னம் சின்னத்துக்கு வாக்களித்தால் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை மொத்தமாக சின்னாபின்னமாகி விடும். சிங்களவர்களுக்கு ஒரு முகத்தையும், முஸ்லிம்களுக்கு ஒரு முகத்தையும், தமிழர்களுக்கு ஒரு முகத்தையும் காட்டுகின்றவர் சஜித். ஆகவேதான் அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களத்தில் ஒரு விதமாகவும், தமிழில் வேறொரு விதமாகவும் இருக்கின்றது. 

பூக்களில் மிக சிறப்பானது தாமரை ஆகும். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் மானிட வாழ்க்கைக்கு இன்றி அமையாதவை. சரஸ்வதி, இலக்குமி, துர்க்கை ஆகிய முப்பெருந்தேவியர்களும் தாமரை மலர்களில் அமர்ந்து இருந்துதான் கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை முறையே தந்து அருள் பாலிக்கின்றார்கள். நன்மைகளின் அடையாளமாகவும், மங்கள பொருளாகவும் இந்துக்களாலும், தமிழர்களாலும் தாமரை பார்க்கப்படுகின்றது. எமது அயல் நாடான இந்தியாவின் தேசிய மலராகவும் தாமரையே உள்ளது. இப்பேர்ப்பட்ட மகிமை வாய்ந்த தாமரை மொட்டு சின்னத்தில்தான் எமது வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸ வாக்கு கேட்டு வந்து இருக்கின்றார். அவர் இந்நாட்டுக்கும், இந்நாட்டு மக்களுக்கும் அனைத்து விதமான சுபீட்சத்தையும் பெற்று கொடுக்க வல்லவராக விளங்குகின்றார். அடுத்த ஜனாதிபதியான அவரின் இதய தாமரையில் தமிழர்கள் அனைவரும் இடம் பிடிக்க பிடிக்க வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தாமரை மொட்டு சின்னத்துக்கே தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவே எமது எதிர்காலத்துக்கான உத்தரவாதம் ஆகும். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours