காரைதீவு நிருபர்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து தருவதற்கு ராஜபக்ஸக்கள் இணக்கம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எழுத்துமூல ஒப்பந்தம் செய்து விட்டு மக்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றது, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்ற மிக முக்கியமான பிரச்சினையான காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு முழுமையான அதிகாரங்க கொண்ட சுயதீன ஆணை குழுவை நியமிக்க ராஜபக்ஸக்கள் சம்மதித்து உள்ளனர் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவை ஆதரித்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பங்கேற்புடன் நிந்தவூரில் கடந்த திங்கள் மாலை நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது ஹசன் அலி மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நாம் எதிர்கொள்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தல் இது வரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களை விட மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் எந்த பக்கத்துக்கு செல்ல வேண்டும் என்று அறியாமல் தடுமாறி கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்த ஆரம்பத்திலேயே ஐக்கிய தேசிய கட்சி சார்பு வேட்பாளரான சஜித் பிரேமதாஸ சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த எவருடனும் எந்த ஒப்பந்தமும் செய்ய மாட்டார் என்று பகிரங்கமாக அறிவித்து இருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேச வருகின்ற வேட்பாளருக்குதான் ஆதரவளிக்க முடியும் என்பதாக தமிழ் தரப்புகள் பத்திரிகைகளிலே மக்களுக்கு செய்திகளாக சொன்ன விடயங்களுக்கு இதுவே அவரின் பதிலாக அமைந்தது.
ஆனால் நிபந்தனை இன்றி சஜித்தை ஆதரிப்பதாகவும், இந்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நிபந்தனை இல்லாமல் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருவதாகவும் சஜித்துக்கு இன்று ஆதரவு வழங்கி கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைமைகள் அன்று அறிவித்தன. இது மிகவும் ஆபத்தான நிலைப்பாடு ஆகும். முஸ்லிம் தரப்பை மொத்தமாக ஒரு தரப்புக்கு கூட்டி சென்று படுகுழியில் தள்ளுவதற்கு சமமானது. நமது உரிமையை மறுப்பவரும், அது தொடர்பாக நம்முடன் பேச தயாரில்லாதவருமான வேட்பாளருக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவது நம் எல்லோரையும் கடலுக்குள் கொண்டு சென்று தள்ளுவதற்கு ஈடானது ஆகும். ஐக்கிய சமாதான கூட்டமைப்பு இத்தேர்தலில் எந்தவித பங்களிப்பையும் யாருக்கும் வழங்குவதில்லை என்றுதான் முதலில் தீர்மானித்து இருந்தது.
ஆயினும் கேவலமான முஸ்லிம் தலைமைகள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மக்களை பலி கொடுக்கின்ற விடயம் எமக்கு வெளிப்பட்ட நிலையில் நாம் எமது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய நேர்ந்தது. முஸ்லிம்களை சரியாக வழி நடத்த வேண்டிய கடமையும், தேவையும் எமக்கு உள்ளது என்று நாங்கள் தீர்மானித்தோம். எமது உயர்பீடத்தை கூட்டி நாம் ஆராய்ந்தோம். எமது பெருந்தலைவர் அஷ்ரப் இந்நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளாக ஆராய்ந்து அடையாளம் கண்ட விடயங்களை நாம் பட்டியலிட்டு அவற்றுக்கு புத்துயிர் கொடுத்தோம். அவற்றின் அடிப்படையில் நாம் வேட்பாளருடன் பேச தயாராக இருக்கின்றோம் என்று பத்திரிகைகள் மூலம் அறிய கொடுத்தோம். பொதுஜன பெரமுன கட்சி மாத்திரம்தான் பேச்சுவார்த்தைக்கு எழுத்துமூலமாக எமக்கு அழைப்பு விடுத்தது.
பசில் ராஜபக்ஸ முதலாவது சந்திப்பிலேயே இரு மணித்தியாலங்கள் எம்முடன் பேசினார். எல்லா விடயங்களையும் நாம் தெளிவாக சொன்னோம். முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்தோம். அவர் அவற்றை எல்லாம் எழுத்துமூலம் ஆவணப்படுத்தி தருமாறு கோரினார். நாம் ஏற்கனவே காத்தான்குடியில் பேராளர் மாநாடு நடத்தி எடுத்த 22 தீர்மானங்களை 13 அம்ச கோரிக்கைகளாக சுருக்கி பின்னர் அவரிடம் கையளித்தோம். அத்துடன் அவ்விடயங்கள் குறித்து ஒவ்வொன்றாக அக்குவேறு ஆணி வேறாக அவருடன் பேசினோம். நாம் சக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலங்களில் ஏற்கனவே அவர் என் மூலமாக தெரிந்தும், புரிந்தும் வைத்திருந்த விடயங்கள்தான் அவை. அவற்றை நிறைவேற்றி தருவதற்கு அவர் சம்மதித்தார். அதற்கு பின்புதான் அந்த கட்சியுடன் நாங்கள் கடந்த முதலாம் திகதி மேற்சொன்ன 13 அம்ச கோரிக்கைகளினதும் அடிப்படையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டோம்.
அதன் பின்புதான் உங்கள் முன்னிலைக்கு கோதாபய ராஜபக்ஸவின் மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரி வந்திருக்கின்றோம். ஆனால் முஸ்லிம்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றபோது ஒரு தரப்பினர் நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை நிர்பந்திக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தை அவர்கள் கொத்தடிமைகளாக, அவர்கள் சொல்வதை மாத்திரம் செய்கின்ற மந்தை கூடங்களாக நினைத்து கொண்டுதான் அதற்கான முடிவை அவர்கள் எடுத்திருக்கின்றனர். சிறுபான்மை சமூகத்தினராகிய நாம் யாருக்கும் அடிமை வேலை செய்ய முடியாது. எங்களுக்கென்று தன்மானம் இருக்கின்றது. தனித்துவம் இருக்கின்றது. ஆனால் இது அவர்களுக்கு புதிய விடயம் அல்ல. ஒவ்வொரு தேர்தல்களிலும், ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் அவ்வாறுதான் செய்து வந்திருக்கின்றனர்.
எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் முஸ்லிம்களை தாரை வார்த்து கொடுத்து விட்டு தலைவர்கள் தங்களை வளர்த்து கொள்கின்றார்கள். இனியும் இதை முஸ்லிம் சமூகம் அனுமதிக்கவே கூடாது. அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் முஸ்லிம்களின் சுமார் 62,000 ஏக்கர் காணிகள் மீதான உரித்து கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவ்விடயங்களை சரியாக அலசி ஆராய்ந்து உரிய நீதியை பெற்று தருவதற்கு முழு அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று நாம் கோரி உள்ளோம். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார். அதை போலவே பல முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகள் தர இணங்கி உள்ளனர். எனவே இத்தேர்தலில் நாம் எல்லோரும் கோதாபய ராஜபக்ஸவுக்கு வழங்குகின்ற அந்த புள்ளடி எமது பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு காண்பதற்கான ஆரம்ப புள்ளியாக இருக்க போகிறது. ஆனால் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குகின்ற புள்ளடி உங்கள் முதுகிலே நீங்கள் போடுகின்ற புள்ளடியாகத்தான் இருக்கும். தலைவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவற்றை பயன்படுத்துவார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours