காரைதீவு நிருபர் 

சம்பந்தர் பாடுகின்ற தேவாரம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பு வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரிப்பதற்கு தமிழரசு கட்சி கட்சி எடுத்து உள்ள தீர்மானம் குறித்து நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழ் மக்கள் சார்பான தீர்மானங்களை தமிழரசு கட்சி ஒருபோதும் எடுப்பதே இல்லை. மாறாக ஐக்கிய தேசிய கட்சி சார்பான தீர்மானங்களையே எப்போதும் எடுத்து வருகின்றது. அந்த வகையில்தான் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிறேமதாஸவை ஆதரிக்கின்ற தீர்மானத்தை அது எடுத்து உள்ளது. இதில் அதிசயப்படுவதற்கு எதுவுமே கிடையாது.

ஆனால் தமிழரசு கட்சியின் சுய உருவத்தை தமிழ் மக்கள் அண்மைய வருடங்களில் உள்ளபடி மிக நன்றாக புரிந்து விட்டார்கள். ஆகவே தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கு பின்னால் தமிழ் மக்கள் இம்முறை செல்லவே மாட்டார்கள். தமிழ் மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருக்கின்றனர். அதன்படி இம்முறை தமிழ் மக்களின் கணிசமான வாக்குகள் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோதாபயவுக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமே கிடையாது.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மூலமாக எந்த நன்மைகளையும் சம்பந்தன் கம்பனி பெற்று தரவே இல்லை. உரிமைகள் மாத்திரம் அல்ல அபிவிருத்திகள்கூட சொல்ல தக்க அளவில் கடந்த நான்கரை வருடங்களாக பெற்று தரப்படவே இல்லை. அரசியல் அமைப்பை திருத்தி அரசியல் தீர்வு தர போவதாக சொல்லி பாராளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றிய ஏமாற்று வித்தைதான் நடந்தேறியது. 

தீபாவாளிக்கு தீர்வு வரும், தைப்பொங்கலுக்கு வரும் என்று சம்பந்தர் செய்தி வாசித்து கொண்டிருக்கிறாரே தவிர வேறு எதுவும் நடக்க போவதே இல்லை. குறைந்த பட்சம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருகின்ற விடயத்திலாவது இக்கூட்டு களவாளிகள் இதய சுத்தியுடன் செயற்பட்டு இருந்தால் பரவாயில்லை. 

இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும். சஜித் பிறேமதாஸ அவரின் தந்தை ஆர். பிறேமதாஸவின் அதே பாதையில் பயணித்து ஆட்சி புரிய போவதாக அடிக்கடி சொல்லி வருகின்றார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் பிரதமராகவும் பின் ஜனாதிபதியாகவும் ஆர். பிறேமதாஸ இருந்த காலம் இலங்கையின் இருண்ட யுகமாகவும், கொடுங்கால் ஆட்சிக்கு முன்னுதாரணமாகவும் இருக்கின்றது. 

குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், இன கலவரங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. தமிழர் தேசத்தில் என்றும் முன்பு இருந்திராத வகையிலும், ஏனைய மாவட்டங்களில் இல்லாத அளவுக்கும் பாதுகாப்பு தளங்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டன. அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்டனர். 

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் சட்டவிரோதமான அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்டது.  பயங்கரவாத தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழர் பகுதிகளில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்பாவி தமிழ் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் யாழ்ப்பாணத்தில் இருந்த பல கட்டிடங்களுக்கும் தீ மூட்டியது.

யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் பிரேமதாஸக்கள்.குமுதினி படகு படுகொலையை நடத்தியவர்கள் பிரேமதாஸக்கள். தமிழ் மக்களின் அறிவு பொக்கிசமாகிய யாழ். நூலகத்தை பிரேமதாஸக்களே எரித்து சாம்பலாக்கினார்கள். கறுப்பு ஜூலை கலவரத்தின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலைக்குள்  இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் குத்தியும், வெட்டியும் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களுக்கு இது வரை நீதி கிடைக்கவும் இல்லை. கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை. 

கொல்லப்படுகின்ற  தமிழர்களின் உடல்களை இராணுவம் தகனம் செய்வதற்கான அனுமதியை சட்டமாக்கி வழங்கியவர்கள் பிரேமதாஸக்கள். நவாலி தேவாலய படுகொலை, சன்னிதி தேர் எரிப்பு, செஞ்சோலை படுகொலை ஆகியவற்றை நடத்தியவர்களும் இப்போது பிரேமதாஸவின் முகாமில் அங்கத்துவம் பெற்று இருக்கின்றனர். 

ஆனால் இவற்றை எல்லாம் தமிழரசு கட்சி மறந்திருக்கலாம் அல்லது மறைத்து வைத்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இன்னமும் மறந்து விடவே இல்லை. எமது வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக மாத்திரம் விரல் நீட்டி பேசுவதை எமது மக்கள் ஏற்று கொள்ளவும் மாட்டார்கள். மேலும் ஐக்கிய தேசிய கட்சியினர் அவர்கள் மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக இது வரை எந்த பிராயச்சித்தமும் செய்யவில்லை என்பதையும் எமது மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன உறவினர்களின் பிரதிநிதி ஒருவரால் வவுனியாவில் நடத்தப்பட்ட செருப்படி தாக்குதல் முயற்சி சம்பந்தருக்கு மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த தமிழரசு கட்சியின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியே ஆகும். சஜித் பிறேமதாஸ மீதும், ஒட்டுமொத்த ஐ. தே. க மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியே ஆகும்.தமிழரசு கட்சியையும், ஐ. தே. கவையையும், சஜித்தையும் தமிழ் மக்கள் நிராகரித்து உள்ளனர் என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours