(துதி)
வட்டார ரீதியில் தங்களின் அரசியல் நடைபெறவில்லை. ஆனால் மக்களுக்கான அபிவிருத்திகள் பல நடைபெற்றே உள்ளன. இதனை மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் மத்தியில் எமது மாநகரசபை செயற்பாடுகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற 2020ம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விசேட அமர்வில் பாதீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் காந்தராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்தக்குப் பதில் வழங்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதீடு தொடர்பில் உறுப்பினர் காந்தராஜா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வருடத்தில் இந்த மாநகரசபையால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஒன்றை மட்டும் சொல்ல முடியும் நன்றாக இருந்த தனியார் பஸ் தரிப்பு கட்டிடத்தை உடைத்து ஏதோ பாரிய கட்டிடம் ஒன்றை அமைக்கப் போவதாகச் சொல்லி நகர அபிவிருத்தித் திட்டத்துடன் சேர்ந்து ஒட்டகக் கொட்டகை ஒன்றை அமைத்தது தான் பெரிய சாதனை. தற்போதைய பாதீட்டிலும் பெரிதாகப் புகழும் அளிவிற்கு ஒன்றும் இல்லை. வெறுமனே பிரயோசனமற்றதாகவே இருக்கின்றது. இத்தகைய பாதீட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என்று தெரிவித்தார்.
இதற்கு மாநகர முதல்வர் பதிலளிக்கையில்,
கடந்த வருடம் எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது என்பதை உங்களை விட மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் மத்தியில் எமது மாநகரசபை செயற்பாடுகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதனை நீங்களும் உங்கள் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 2008ல் இருந்து 2012 வரை பல அபிவிருத்திகள் இடம்பெற்றதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். அப்போது மேற்கொண்ட அபிவிருத்திகளை ஒருபோதும் பெரிதாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அது கிழக்கில் யுத்தம் மௌனித்து புனர்வாழ்வு விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம். பலவேறு நாடுகள் கிழக்கு மக்களின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதிகளை அள்ளிக் கொடுத்தன. அதனை வைத்தே அபிவிருத்தி என்ற பெயரில் சில செய்து காட்டப்பட்டன. அதனைப் பெரிய சாகசம் போன்று கதைக்க முடியாது. ஆனால் தற்போது எம்மால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எமது மக்களின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுபவை. அந்த அடிப்படையில் எமது மக்களின் நிதியைக் கொண்டு பல்வேறு அபிவிருத்திகள் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட்டார ரீதியில் தங்களின் அரசியலை அபிவிருத்தி செய்வதற்கு இடமளிக்க முடியாது. ஆனால் மக்களுக்கான அபிவிருத்திகள் பல நடைபெற்றே உள்ளன. எதிர்வரும் வருடத்தில் இதற்கும் மேலான அபிவிருத்திகள் மாநகரசபையால் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours