(காரைதீவு  நிருபர்)

காரைதீவுப் பிரதேசத்தில் டெங்கின்தாக்கம் உக்கிரமடைந்துவரும் நிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இரத்தப்பரிசோதனை செய்யும் அலுவலர்இல்லாமையினால் மக்கள் திண்டாடவேண்டி நேர்ந்துள்ளது.

இதனால் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடும்சாத்தியமும் நிலவுவதாகத் கூறப்படுகிறது.

கடந்த இருமாதகாலத்துள் மட்டும் காரைதீவில் 51 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனரென்று சுகாதாரவைத்திய அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் காய்ச்சல் என்று காரைதீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றால் அங்கு இரத்த மாதிரியைப்பெற்றுவிட்டு அறிக்கையை பெற பின்னர் வாருங்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் அவ் இரத்தமாதிரியை வேறொரு வைத்தியசாலைக்கு அனுப்பி சோதனை செய்து பின்னரே அறிக்கையை பெறுகின்றனர். இதனால் நோயாளிக்கான உடனடி சிகிச்சை தாமதமாகிறது.அதனால் நோய் அதிகரிக்கும் சாத்தியத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுகிறது என பொதுமக்கள்கூறுகின்றனர்.

காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச்சென்று இரத்தப்பரிசோதனை செய்யுங்கள் என்று வாய்கிழியக்கத்துகிறார்களே தவிர அதற்கான வசதிகளைச் செய்துதருகிறார்களில்லையே என்று பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இது தொடர்பில் காரைதீவு பிரதேச வைத்தியஅதிகாரி டாக்டர் ஜீவா சிவசுப்பிரமணியத்திடம் கேட்டபோது 'பொதுமக்கள் சொல்வதில் தவறில்லை. எம்மிடம்இரத்தப்பரிசோதனைக்குரிய இயந்திரமுள்ளது. ஆனால் அதற்கான உத்தியோகத்தர் இல்லை என்பதே இன்றைய பிரச்சினையாகும். ஆரம்பத்தில் கல்முனையிலிருந்து ஒரு அலுவலர் வந்துசென்றார்.பின்னர் வரவில்லை. எனவே இன்றையநிலையில் தினம்தினம் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரத்தப்பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மைதான்'என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours