நூருல் ஹுதா உமர் -


கிராமத்து பிரதேச மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களைவிட ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். அவர்களின் ஒழுக்கமே அவர்களின் பல்வேறு சாதனைகளுக்கு காரணமாக அமைகிறது. நகர்ப்புற பாடசாலை நிகழ்வுகளை பார்க்கிலும் கிராமத்து பாடசாலை வைபகங்கள் சிறப்பாக அமைய ஒழுக்கமிக்க மாணவர் சமூகமே காரணம் என கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ .எல்.எம்.சலீம் தெரிவித்தார். 



கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச். எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் விடுகை விழாவும் லீடரின் விடுகை பூக்கள் நூல் வெளியிடும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 



மேலும் பேசிய அவர், மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயமாக இயங்கி வந்த இப்பாடசாலை சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வேறு இடத்தில் இயங்க ஆரம்பித்ததும் குறித்த இப்பாடசாலை தற்போது அமைந்துள்ள காணியை மீனவ சங்கங்களுக்கு வழங்கவேண்டும் என்று ஒரு சாராரும், மைதானமாக மாற்ற வேண்டும் என ஒரு சாராரும் ஏட்டுக்கு போட்டியாக போட்டிபோட்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்த நான் இப்பாடசாலையை இங்கு அமைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து இப்பாடசாலையை அமைத்தேன். எனக்கு உதவியாக உப பிரதேச செயலாளர் அவர்களும் மாகாண கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரும் இருந்தனர். 



இப்பாடசாலையை இங்கு அமைக்க விடாது தடுப்பதில் அரசியல்வாதிகள் கடும் பிரயத்தனைத்தை எடுத்து தோல்விகண்டனர். பிரதேச செயலக வளங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்போது 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்விபயில்வதில் மகிழ்ச்சியடையும் இச்சந்தர்ப்பத்தில் இப்பாடசாலைக்கு உழைத்த அத்தனை போரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 



பாடசாலை அதிபரின் வேண்டுகோளை ஏற்று சாஸ்டா (ZESDO) அமைப்பினரால் பாடசாலை மாணவர்களுக்காக ஒலிபெருக்கி சாதனங்களை அவ்வமைப்பின் முக்கியஸ்தரும் உதவி கல்விப்பணிப்பாளருமான என்.எம்.அப்துல் மலிக் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours