(காரைதீவு நிருபர் சகா)

பிரதேச செயலகங்களுக்கிடையிலான அம்பாறை மாவட்டமட்ட ஹொக்கி விளையாட்டுப்போட்டியில் நான்காவது தடவையாகவும் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் அணியினர் வெற்றிவாகை சூடி கிழக்கு மாகாணத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

குறித்த ஹொக்கி விளையாட்டின் மாவட்டமட்ட இறுதிப்போட்டி காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நேற்றுமுன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் அம்பாறை பிரதேசசெயலர் பிரிவும் காரைதீவு பிரதேசசெயலர் பிரிவும் மோதின.

போட்டி ஆரம்பித்து 8வது நிமிடத்தில் அம்பாறைஅணி ஒரு கோலைப் போட்டது. இருபக்கமும் விட்டுக்கொடாதவண்ணம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை போட்டிமுடிவடைய 2நிமிடமிருக்கையில் 58வது நிமிடத்தில் காரைதீவு அணி ஒரு கோலைப்போட்டு சமப்படுத்தியது.

அம்பாறை மாவட்ட விளையாட்டுஅதிகாரி எம்.எஸ்.அமீரலி முன்னிலையில் யாழ்.நடுவர்கள் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியைத்தீர்மானிப்பதற்கு  தண்டனை உதை வழங்கப்பட்டது.

அதில் அம்பாறை அணி 5-2என்ற அடிப்படையிலும் காரைதீவு அணி 5-3என்ற அடிப்படையிலும் கோலைப்போட்டதால் காரைதீவு அணி வெற்றிவாகை சூடியது. வெற்றிக்கான கோலை அணிப்பொறுப்பாளர் தவராசா லவன் போட்டு அணியின்வெற்றிக்கு அடிகோலினார்.

காரைதீவு பிரதேசசெயலக அணிசார்பில் விளையாடிய ஹொக்கிலயன்ஸ் அணித்தலைவர் எஸ்.கேதீஸ்வரன் மாகாணமட்டத்தில் போட்டியிடுவதற்கான பயிற்சிகளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

இதுவரை காரைதீவு ஹொக்கி லயன்ஸ்அணி மாகாணமட்டத்திற்கு 4தடவையும் தேசியமட்டத்திற்கு 3தடவையும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours