கடந்த 12 மணித்தியாலங்களில் மயிலம்பாவெளியில் 124.2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு நகரத்தில் 122.7 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார்.
கடந்த 12 மணித்தியாலங்களில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணித்தியாலங்களில் நவகிரி 67 மில்லிமீட்டர், தும்பங்கேணி 50.2 மில்லிமீட்டர், உன்னிச்சை 54 மில்லிமீட்டர், வாகனேரி 57.3 மில்லிமீட்டர், கட்டுமுறி வு 22 மில்லிமீட்டர், றூகம் 56.1 மில்லிமீட்டர், கிரான் 82.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைப்பொறுப்பாளர் தெரிவித்தார். இதனால் கோரளைப்பற்று தெற்கு கிரான், போரதீவுப்பற்று வெல்லாவெளி, ஏறாவூர்பற்று செங்கலடி, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை போன்ற பகுதிகளில் உள்ள பாதைகளில் மக்கள் போக்குவரத்துத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீரேந்து பிரதேசங்களை அண்டிய பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது இடங்களில் தங்கவைக்கப்படாது. சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours