காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு வர்த்தகர்கள் வழமை போல் கோவிட் -19 சட்ட விதிமுறைகளுக்கு அமைய தங்களது வியாபாரங்களை செய்யலாம். அதில் எவ்வித தயக்கங்களுமிருக்க தேவையில்லை. சாய்ந்தமருது கொரோனா செயலணி எடுத்த தீர்மானத்தை மாளிகைக்காடு மக்கள் கடைபிடிக்கவேண்டிய அவசியமில்லை என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர்
தெரிவித்தார்.
இன்று இரவு மாளிகைக்காடு பிரதேசத்தின் பிரதான வீதியில் உள்ள உணவகம் ஒன்றை மூட ஆயத்தங்களை செய்த போது அங்கு வருகை தந்த காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர், மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர் ஆகியோர் களத்தில் நின்று அந்நடவடிக்கையையை வெற்றிகரமாக முறியடித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாளிகைக்காடு பிரதேசத்திற்க்கு என தனியாக காரைதீவு பிரதேச சபை, காரைதீவு பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் தனியான சம்மாந்துறை பொலிஸ் பிரிவு என்பன உள்ள போது அடுத்த பிரதேச பிரிவினர் அத்துமீறுவது சட்ட விரோதமான செயலாகும்.
மாளிகைக்காடு பிரதேசத்தை சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்துவது தொடர்பில் யாரும் காரைதீவு பிரதேச சபை, காரைதீவு பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் என்பனவற்றுடன் கலந்துரையாடல் செய்யவில்லை. இங்கு மாளிகைக்காட்டில் நிறைய இயங்குநிலை சமூக சேவை அமைப்புக்கள், பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் யாரிடமும் எவ்வித கலந்துரையாடலும் செய்யாமல் தான்தோன்றித்தனமாக சிலர் எடுத்த தீர்மானங்களை எப்படி நாங்கள் பின்பற்றுவது?
முகவரி இல்லா மொட்டைக்கடதாசிகளை நம்பி எங்களின் பிரதேசத்தின் வர்த்தகர்களை நாங்கள் பலியிட முடியாது. எங்களின் மாளிகைக்காட்டு மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இனியும் வழங்குவார்கள். இனியும் யாராவது இது விடயமாக முரண்பாடுகளுக்கு வந்தால் உடனடியாக மாளிகைக்காடு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருடன் தொடர்பு கொள்ளுங்கள் என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
Post A Comment:
0 comments so far,add yours