மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரொனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரொனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours