நூருல் ஹுதா உமர்.


கிழக்கு மாகாணம் இயல், இசை, நாடகம், இலக்கியத்தில் எப்போதும் தனிரகமாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும். அப்படியான கலை ரசனை கொண்ட பூமியில் முத்தமிழர் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரமளவில் அமைந்துள்ளதே மருதமுனை எனும் கிராமம்.

இப்போது அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் கீழுள்ள மருதமுனையில் கைத்தறி நெசவு மட்டுமல்ல. கலை, இலக்கியம், கல்வியில் கொடிகட்டிப்பறக்கும் மற்றும் பறந்த ஜாம்பவான்கள் ஏராளம். அதில் மருதூர் கொத்தன், அ.மு. சரிபுதீன்,  சின்னாலிம் அப்பா, மருதூர் கனி, மருதூர் வாணர் என ஆரம்பித்த பட்டியலில் ஈழத்து நாகேஷ் என புகழ்பெற்ற கலைஞர் சக்காப் மௌலானாவும் முக்கியமானவராக இடம்பிடித்தார். நில்லா பட்டியல் நீண்டாலும் அவர் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை.

மருதமுனையின் மூத்த அரசியல் தந்தையான செனட்டர் மசூர் மௌலானாவின் சகோதரரான இந்த உள்ளிக்குச்சி உடம்புக்காரர் இந்திய சினிமாவுக்கு கிடைத்திருந்தால் தேசிய விருதுகள் தொடக்கம் பல விருதுகளை அள்ளி குவித்திருப்பார். அப்படியான திறமை கொண்ட இவர் மரணித்து இன்றுடன் இரண்டு தசாப்தங்கள் முற்றுப்பெற்று விட்டது. ஆனாலும் நினைவுகள் பசுமரத்து ஆணிபோல அனைவரது மனதிலும் அப்படியே குடிகொண்டுள்ளது எனலாம்.

சிலோன் சுதந்திரமடைய முன்னர் 1938.10.08 அன்று மருதமுனையில் பிறந்து வளர்ந்த சக்காப் மௌலானா மற்றுமொரு இஸ்லாமிய நகரான சாய்ந்தமருதின் மகளை மணந்து சாய்ந்தமருது மருமகனானார். வானொலி பெட்டிகள் அரிதாக காணப்பட்ட 1960-80 காலப்பகுதியில் வானொலியில் இவர் நடித்து வெளியாகிக் கொண்டிருக்கும் "முத்தாராம்" மற்றும் "முதுசம்" போன்ற ஓரங்க நாடகத்தை செவிமடுக்க வானொலி நேயர்கள் முண்டியடித்து வந்து வானொலிக்கு காதை வாடகைக்கு கொடுக்கும் பழக்கத்தை கொண்டிருந்த வரலாற்றை இப்போதும் அவருடைய ரசிகர்கள் இரைமீட்டுகிறார்கள்.

ஆங்கில ஆசானாக தன் கடமையை ஆரம்பித்த இவரின் ஆசிரிய கற்பித்தல் பாணி வித்தியாசமானது. பொத்துவில் மகா வித்தியாலயத்தில் கன்னி ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் இறுதியாக மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றார். அதனிடையே 11 பாடசாலைகளில் கடமையாற்றியுள்ள இவர் பல்லாயிரம் மாணவர்களுக்கு அறிவு கற்பித்த ஆங்கில ஆசான் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லினங்களையும் பல ஊர்களையும் இணைக்கும் பாலனமாக இருந்த இவரின் கலைப்பயணம் கடுமையான சோதனைகள் நிறைந்தது.

எட்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு ஏழு ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இவரின் கலைவாரிசாக பல விருதுகளை பெற்ற மகன் நாடறிந்த கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா திகழ்கிறார். பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அடங்களாக சகல பிள்ளைகளையும் கல்விமானாக உருவாக்கிய இந்த கலைஞரின் வாழ்க்கை பயணம் மிகப்பெரும் மேடு பள்ளங்களை சந்தித்திருந்தது.

வீழ்கின்ற போதெல்லாம் எழும் சக்தி கொண்ட இந்த கலைஞருக்கு நண்பர்கள் எப்போதும் துணையாக நின்றிருக்கிறார். " கலைக்கூடல்" எனும் கலை இயக்கத்தை ஸ்தாபித்து அதன் தலைவராக இருந்து பல கலைஞர்களை உண்டாக்கிய ஆசானாகவும் இவர் வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்.  முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் வாழ்வோரை வாழ்த்துவோம் என்ற தொனியில் 1992 ஆம் ஆண்டு கொழும்பு சரச விபாய மண்டப அரங்கில் நடத்திய பாராட்டு விழாவில் கலைச் சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் நாட்டின் முக்கிய விருதுகள் பலதையும் பெற்றிருந்தார்.

டாக்டர் அப்துல்லாஹ் எனும் நாடகம் 1970 காலப்பகுதியில் இவரால் நடித்து வாழ்நாள் புகழ் பரப்பி நிறைய ரசிகர்களை இவரின் பக்கம் திருப்பிய நாடகமாக இருந்தது. சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளை நாடகங்களை கொண்டு முகத்திரை கிழித்தெறிந்த நாடகமாக "கக்கிலியும் கிக்கிலியும்" எனும் நாடகம் இருந்தது. இந்த நாடகத்தின் பிரதிபலிப்பாக அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இளைஞர்கள் பெண் வீட்டாரிடம் சீதனம் வாங்க கூச்சப்படும் அளவுக்கு இருந்தது எனலாம்.

சமூகம் பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்க பயந்த அரசியலை தன்னுடைய "அரபு இஸ்ரேலிய போர்" எனும் நாடகத்தின் மூலமும், சமூக பதட்டத்தை "பேயும் பிசாசும்" எனும் நாடகத்தையும் கொண்டு சமூக மடமையின் மீது சாட்டையால் அடித்தார். அத்துடன் விட்டுவிடாது விடியும்வரை, தூது, கறுப்புப்பணம், கிருமிகள் என தொடர் நாடகங்களை கொண்டு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தன்னுடைய 25 வருட நாடக வாழ்வில் பல்வேறுபட்ட இழப்புகள், அவமானங்கள், விட்டுக்கொடுப்புக்களுடன் உயர்ந்த இந்த கலைஞரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசை வெகுவாக கட்டிப்பிடித்துக் கொண்டு களம் அமைத்து கொடுத்தது. அதிக ரசிகர்களை கொண்ட கலைஞர் சக்காப்  மௌலானா கடல் கடந்தும் அறியப்படலானார். அதனால் தென்னிந்திய பாடகர்கள், கலைஞர்களை அழைத்து வந்து மிகப்பெரும் கலைவிழாக்களை கிழக்கில் நடத்திய பெருமைக்கும் சொந்தக்காரன் இந்த கலைஞர்.

இப்போதைய தமிழ் திரைப்படங்களில் வைகைப்புயல் வடிவேல் திரையில் தோன்றினால் கவலை மறந்து சிரிப்பது போன்று ஈழத்து நாகேஷ் என அறியப்பட்ட கலைஞர் சக்காப்  மௌலானா இருந்தாலே அந்த இடம் சிரிப்பினாலும், மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருக்கும். இப்படியான அந்த ஆத்மா உடல் ரீதியாக பிரிந்து சென்றாலும் உணர்வு ரீதியாக வாழ்கிறார். கடந்த 2001 ஜனவரி 18 இல் சாய்ந்தமருது ஒராபி பாஷா வீதியில் காலமான அந்த கலைஞர் அக்பர் ஜும்மா பள்ளி மையவாடியில் நிரந்தரமாய் உறங்கலானார்.

மருதமுனையில் பெயர் பரப்பிய அந்த கலைஞரின் கலை வயலில் விதையாக வீழ்ந்த எத்தனையோ விதைகள் இன்று பெயர் பரப்பும் அளவுக்கு புகழுடன் வளர்ந்து நிற்கிறது. அவர் விதைத்த மருதம் கலைக்கூடல் வயலை இன்று அவர் மகன் திறன்பட உழுது கொண்டிருக்கிறார். நிறைய கலைஞர்களை அறுவடை செய்ய !!
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours