நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபையினால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தின் அருகில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து பெறப்பட்ட முகவரிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க உள்ளோம் என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்த குப்பைகளினால் மக்கள் அசௌகரியம் எனும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் களத்திற்கு விஜயம் செய்த டாக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழுவினர் அந்த குப்பைகளை அகற்றிய போது அந்த குப்பைகளிலிருந்து மின்சார சபை நிலுவைப் பட்டியல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலுவைப் பட்டியல், டெலிகொம் நிலுவைப் பட்டியல் உட்பட முகவரி அச்சிடப்பட்ட நூற்றுக்கணக்கான முகவரிகளை கைப்பற்றினர். அந்த முகவரிகளை அடிப்படையாக கொண்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்தோரை நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த போவதாக அங்கு கருத்து தெரிவித்த போது மேலும் தெரிவித்தார்.

இங்கு கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சாய்ந்தமருது இராணுவ முகாம் படை வீரர்கள், கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு பொறுப்பாளர் ஏ.ஏ.எம். அஹ்சன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம். பைசால், டெங்கு கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours