(க.விஜயரெத்தினம்)


கடந்த 2020 ஆண்டானது மாணவர்களுக்கு இடர் மிகுந்த ஆண்டாக காணப்பட்டாலும் இவ்வாண்டானது மாணவர்களின் கற்றல்,செயற்பாடுகளை வினைத்திறனுடன் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாக காணப்படுகின்றது.மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை மீள கட்டியெழுப்பதற்குரிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் இருக்க வேண்டுமென மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு  உள்ளீர்க்கப்பட்ட 70பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(18) மணியளவில்  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி சு.சரணியா,திருமதி சாமினி ரவிராஜா,உதவி கல்வி பணிப்பாளர் ஜோன் பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனங்கள் வலயக்கல்வி பணிப்பாளரினால் வழங்கப்பட்டதுடன் அவர்கள் கடமையாற்றும் பாடசாலைகளின் விபரங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது தொடர்ந்து  உரையாற்றிய அவர்;
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு 386 பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. உண்மையிலே மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பொறுத்தவரையில் இன்றைய நிலையில் ஏற்கனவே இங்கு சேவையிலிருக்கின்ற ஆசிரியர்களில் 324ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றார்கள்.அதேசமயம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்களுக்கு 300ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது.மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்,மற்றும் கல்குடா கல்வி வலயங்களுக்கு தலா 300 ஆசிரியர்கள்  ஒவ்வொரு வலயங்களுக்கும் மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் பணிக்காக தேவையாக உள்ளனர்.ஆனாலும் எமது பட்டதாரிகள் எல்லோருக்கும் விருப்பம் மட்டக்களப்பு கல்வி வலயத்திலேயே தாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதாகும்.அதற்குப் பின்னால் பல அழுத்தங்களை பிரயோகித்திருக்கின்றீர்கள். இதுவே உண்மையாகும். பெரும்பாலானவர்கள் இந்த வலயத்திற்குள்ளேயே வேலை செய்யவேண்டுமென்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் திசைமுகப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எமது வளவாளர்களை கொண்டு பாடரீதியாக கற்பித்தல் பிரயோகப்பயிற்சி வழங்கப்படுகின்றது.மட்டக்களப்பு சமூகத்திற்கு சிறந்த சேவையை செய்ய வேண்டுமென்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.அதனை ஒவ்வொரு ஆசிரியர்களும் வினைத்திறனுடன் தங்கள் சேவையை ஆற்றவேண்டும்.

2021 ஆம் ஆண்டு கல்வித்துறையை பொறுத்தமட்டில்  மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் எதிர்ப்பார்ப்புள்ள ஆண்டாகும்.கடந்த 2020ஆம் ஆண்டானது மாணவர்களுக்கு இடர்நிறைந்த காலமாகும்.இதனால் மாணவர்கள் கல்வியில் பின்னடைவுகளை சந்தித்துள்ளார்கள்.மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை மீள கட்டியெழுப்பதற்குரிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் இருக்க வேண்டும்.அதுவே இன்றைய உங்கள் பணியாகும்.அதனை புதிய யுத்திகளை,கண்டுபிடிப்புக்களை கொண்டு செவ்வனே ஆற்றுவதற்கு முன்வரவேண்டும் தெரிவித்தார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours