மற்றுமொரு தமிழ்ப்புத்தாண்டு 'பிலவ' வருடம் என்ற  பெயரில்  இன்று14ஆம் திகதி உதயமாகிறது. தமிழர்களின் 60வருட சுழற்சியில் இது 35ஆவது வருடமாகும்.
முதலில் தமிழர் வகுத்த அந்த அறுபது வருடங்கள் எவையெனப்பார்க்கலாம்.
அறுபது ஆண்டுகள்
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் அறுபது ஆண்டுகளின் பட்டியலை பிரபவ முதல் அட்சய வரை காணமுடிகின்றது.
இந்த 60 ஆண்டுக் காலப் பொழுதில் இருக்கும் 60 வருடங்களுக்கும் தனித் தனிப் பெயர்கள் உள்ளன. இந்த 60 ஆண்டுத் தொகுதி அல்லது காலகட்டம் சுழன்று சுழன்று மீண்டும் மீண்டும் வருவதாகக் கணக்கிடப்படுகிறது. இதனால் இந்த 60 வருடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வருடமும் 60 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் திரும்பி வருகிறது. வருடங்களின் இந்த சுழற்சி என்பது 'சம்வத்ஸர சுழற்சி' என்று அழைக்கப்படுகிறது.
அவையாவன.
01.  பிரபவ   02.  விபவ    03.  சுக்ல     04.  பிரமோதூத
05.  பிரசோற்பத்தி    06.  ஆங்கீரச      07.  ஸ்ரீமுக
08.  பவ     09.  யுவ    10.  தாது       11.  ஈஸ்வர
12.  வெகுதானிய      13.  பிரமாதி       14.  விக்கிரம
15.  விஷு     16.  சித்திரபானு   17. சுபானு 18.  தாரண
19.  பார்த்திப  20. விய  21. சர்வசித்து 22.  சர்வதாரி
23.  விரோதி  24. விக்ருதி 25.  கர   26.  நந்தன
27.  விஜய  28.  ஜய  29.  மன்மத   30.  துன்முகி
31.  ஹேவிளம்பி  32.  விளம்பி  33.  விகாரி
34.  சார்வரி  35. பிலவ  36. சுபகிருது 37. சோபகிருது
38.  குரோதி  39.  விசுவாசுவ 40. பரபாவ                        
 41.  பிலவங்க  42. கீலக 43.சௌமிய 44.  சாதாரண
45.  விரோதகிருது 46.  பரிதாபி 47.  பிரமாதீச
48.  ஆனந்த 49.  ராட்சச 50.  நள 51.  பிங்கள
52.  காளயுக்தி 53.  சித்தார்த்தி 54.  ரௌத்திரி
55.  துன்மதி 56.  துந்துபி 57.  ருத்ரோத்காரி
58.  ரக்தாட்சி 59.  குரோதன  60.  அட்சய
வானியல் தொடர்பான அத்தனை கணிப்புகளையும் தமிழர் அன்றே செய்திருந்தனர். அவை பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று விஞ்ஞானிகள் கூறிடும் சந்திரகிரகணம் சூரிய கிரகணம் போன்றவற்றை அன்றே தமிழர்கள் மிகவும் துல்லியமாகக்கணித்திருந்தனர். இன்றும் அவற்றை பஞ்சாங்கத்தில் காணலாம்.
பஞ்சாங்கத்தின்படிதான் தமிழர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை இடம்பெறும்  சகல சடங்குகள் கிரியைகளையும் கணிப்பார்கள். நாமகர்ணம் எனப்படும்  பெயர் வைப்பது தொடக்கம் திதி வரை அனைத்தும் பஞ்சாங்கத்தில்தான் பார்ப்பதுண்டு.
இந்த இடத்தில் பஞ்சாங்கம் என்றால் என்ன?  அது என்ன சொல்கிறது.? போன்ற விடயங்களைப் பார்க்கலாம்.

பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்சாங்கம் என்பது வானியல் தொடர்பான 5 விஷயங்களை நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.
அவை :
1. வாரம் 2. நட்சத்திரம் 3. திதி 4. யோகம் 5. கரணம்
வாரம் : ஞாயிறு முதல் சனி வரையான தினங்கள் 7-யை குறிக்கும்.
நட்சத்திரம் : அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.
திதி : ஒரு வானியல் கணக்கீடாகும். வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
யோகம் : வானில் குறித்த இடத்திலிருந்து சூரியனும் சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
கரணம் : திதியில் பாதியாகும்.

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.
1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசைஇ பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

நாழிகை
நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.
தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.தற்பொழுது பெரும்பாலும் சோதிடம் பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே ஒரு நாளில் (பகல் 10 இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.
ஒரு நாழிகை என்பது 24 நியமங்கள் கொண்ட கால அளவு. பகல் 30 நாழிகைகளையும் இரவு 30 நாழிகைகளையும் கொண்டது ஓரு நாள் எனப்பட்டது.
நாம் பஞ்சாங்கத்தில் ஒரு நட்சத்திரம் அல்லது திதி ஒரு யோகம் இத்தனை நாழிகை இன்று இருக்கும் என்று ஏதாவது எண்ணை குறிப்பிட்டு இருக்கும்   ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரத்தை குறிக்கும்
24 நிமிடம் = ஒரு நாழிகை
60 நாழிகை = ஒரு நாள்
60 நிமிடம் = ஒரு மணி
24 மணி = ஒரு நாள்

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.
ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணிகளைக் குறிக்கும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் மலமாதம் என்றும் இரண்டு அமாவாசை வந்தால் விஷ மாதம் என்றும் சொல்வர். இந்த இரண்டிலுமே சுபநிகழ்ச்சி செய்வது கூடாது.

1.திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.
2.வாக்கிய பஞ்சாங்கம்
வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள் நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள் அசைவுகள் தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
தமிழ்ப் பாரம்பரியமும் இந்த முறையையே பின்பற்றுகிறது. சூரியன் தனது வான்வெளிப் பயணத்தின் பொழுது 12 ராசிகளின் வழியாகச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் தங்கியிருக்கும் காலம், ஒரு குறிப்பிட்ட மாதமாகக் கணக்கிடப்படுகிறது. 
இவ்வாறு, முதல் ராசியான மேஷ ராசியில் அவர் தங்கி இருக்கும் காலம் சித்திரை மாதமாகக் கருதப்படுகிறது. அவர் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளான சித்திரை முதல் நாள் ஒரு புதிய தமிழ் வருடத்தின் துவக்கமாகவும்இ தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இது சித்திரை வருடப் பிறப்பு என்றும் ஆங்கிலத்தில் தமிழ் நியூ இயர் என்றும் கூட வழங்கப்படுகிறது.
தமிழர்கள் காலத்தைக் கணக்கிடும் முறைப்படிஇ வசந்த காலம் என்பது சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது. எனவேஇ இந்த மாதப் பிறப்பு புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்ற கருத்தும்இ சிலரிடையே நிலவுகிறது.    

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்
மரபுகள்
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மாபலா வாழை ஆகிய முக்கனிகள் வெற்றிலை பாக்கு நகைகள் நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு புத்தாடை அணிந்துகோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
புது வருட பிறப்பு நாளில் நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள். நேர்மறையாக பேசுங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இந்த ஆண்டு அனைவரும் குடும்பத்தோடு வீட்டிற்குள் இருப்பதால் சுவையான சைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இதுபோல ஒற்றுமையோடு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு - அறிமுகம்
தமிழ் மாதமாகிய சித்திரை மாதப் பிறப்பு என்பது ஆண்டு தோறும் புது வருடப் பிறப்பாகக் கருதப்படுகிறது. பொதுவாக இது ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வருகிறது. மங்களகரமான சித்திரை பிலவ வருடம் மங்களகரமான சித்திரை பிலவ வருடம்  உத்தராயனம்   நிறைந்த புதன் கிழமை 14.04.2021 பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக பாடி வைத்துள்ளார்.
பிலவ ஆண்டுக்கான இடைக்காட்டுச் சித்தர் பாடிய வெண்பா:

'பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர்
சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்'

இந்தப் பாடலுக்கான விளக்கம்
பிலவத்தில் மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். வேளாண்மை செழித்து வரும் வேளையில் இயற்கையால் பாதிப்பு ஏற்படும் என்று வெண்பா கூறுகிறது.
பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.

பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன. பஞ்சாங்கப்படி நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும் மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும் மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும் கும்ப ராசியில் அதிசார குரு பகவானும் மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.

விவசாயம் செழிக்கும் தொழில் லாபம் வரும் அரசு தனியார் வேலைதனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். கலைத்துறை வாய்ப்பு இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும் அங்கீகாரமும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சார்வரி வருடத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திறைத்துறை கலைஞர்கள்தான்.
பிலவ வருடம் புதன்கிழமை வருடப்பிறப்பு இருப்பதால் நன்றாக மழை பெய்யும். செவ்வாயின் வீட்டில் சுக்கிரன் சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கால்நடைகளுக்கு புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும். புழுதி சூறாவளி காற்றுகள் பலமாகத் தாக்கும். ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.
அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும். அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.
சார்வரி வருடத்தில் மாணவர்களுக்கு கல்வி சாலைகளின் வாசனையே இல்லாமல் போய்விட்டது. ONLINE கல்விதான் ஆசானாக இருந்தது. ஏராளமான மாணவர்கள் வாசிக்கம் பழக்கத்தை மறந்து விட்டனர். எனவே இந்த பிலவ ஆண்டில் பல மாணவர்களுக்கு ஞாபக மறதி கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும் மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அனைவருக்கும் மங்களகரமான "பிலவ வருடம்"  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours