பொத்துவில் பிரதேச சபை: விக்டர் தோட்ட வட்டாரத்தில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்
மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு
மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு
ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!
'இன,மத, மொழி வேறுபாடுகளின்றி மக்கள் சேவையை முன்னெடுத்த மாமனிதர் மர்ஹும் கலாநிதி.ஏ.ஆர்.மன்சூர் மறைந்து இன்றுடன் (25) நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன'
பல்லினத் தீவில் பல நகரங்கள் அடையாளச் சின்னங்களாக இருந்து வருகையில், மக்கள் தொகையில் மூன்றாவது நகரமாகவும், முஸ்லிம்களின் முகவெற்றிலையாகவும் திகழ்ந்துவரும் நகரமே கல்முனையாகும்.
இந்த நகரத்தினை வடிவமைத்த சிற்பிகளில் பிரதமானமானவர்கள் மர்ஹூம் எம்.எஸ்.காரியப்பர் மற்றும் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் ஆகிய இருவருமே என்பது வரலாறு. இவ்வாறு வரலாற்றைச் செதுக்கிய சிற்பிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் ஏ.ஆர். மன்சூர் மறைந்து இன்றுடன் (25) நான்கு வருடங்களாகின்றன.
இவரது மறைவு கல்முனைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக முழு நாட்டிற்குமே பேரிழப்பாகத்தான் உள்ளது. ஏனென்றால், இன,மத,மொழி கடந்த மக்கள் சேவையால் அனைத்தின மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட மாமனிதராவார்.
விசேடமாக, வடக்கு, கிழக்கில் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுகளை சீர்செய்து சகோதரத்துவத்தினை கட்டியெழுப்புவதில் பெரும்பாங்காற்றிய இவர், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் காரணகர்த்தாவாகவும் திகழ்கின்றார்.
குடும்ப பின்னணியும் கல்வியும்
அத்தகையவரினது தந்தையாரான அப்துல் ரஸாக், தனது தந்தையான மர்ஹூம் ஏக்கீன் தம்பி ஆலிமைப் போல் தனது இளைய மகனான ஏ.ஆர்.மன்சூரை ஆலிமாக மாற்ற வேண்டும் என்ற பெரும் கனவுகளைக் கொண்டிருந்தார்.
எனினும், நான்கு சகோதரர்களுக்கும் ஒரு சகோதரிக்கும் இளையவராய் 1933.05.30ஆம் திகதி பிறந்த ஏ.ஆர்.மன்சூரை, ஆலிமாக்கும் அவரது தந்தையின் கனவை மாற்றிவிட்ட பாடசாலையாக கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம் திகழ்ந்தது.
1943ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கல்முனையில் முதல் முதலில் சித்தியடைந்த மாணவராக மன்சூர் தனது கல்விக்கணக்கினை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1944இல் காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில் இணைந்தார். பின்னர் ஆங்கில பாடசாலையாக அறிமுகமான கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து 1945முதல் 1947வரையான காலப்பகுதியில் ஆங்கிலக் கல்வியை ஆர்வமாகக் கற்றார்.
1947இல் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இணைந்து கொண்ட இவர், தொடர்ந்து ராஜகாரியர் அதிபராக இருந்த மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் இணைந்து புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளையிடம் 1948 முதல் 1952வரை பயின்றார்.
1953முதல் 1954வரை உயர் கல்விக்காக கொழும்பு சென். ஜோசப் கல்லூரியில் இணைந்துகொண்ட இவர், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, 1955முதல் 1958 வரை கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து பயின்றார்.
அதன்பின்னர் 1958இல் உயர்நீதிமன்ற அப்புக்கத்தாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மன்சூர், 1958முதல் 1961வரை பிரபல சட்டத்தரணிகளான ஜீ.ஜீ.பொன்னம்பலம், இஸ்ஸதீன் முகம்மட், ஏ.சி.எம்.அமீர், முன்னாள் பிரதம நீதியரசர் என்.டி.என்.சமரகோன் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.
1958இல் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரைத் திருமணம் செய்த இவருக்கு, மின்ஹா, ரஹ்மத், மரியம் என்ற 03 வாரிசுகள் உள்ளனர்.
கறையில்லா அரசியல் வாழ்வு
1964ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட இவர், முதன்முதலாக கல்முனை பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டதன் ஊடாக தேர்தல் அரசியலுக்குள் பிரவேசித்தார். அன்றிலிருந்தே கல்முனையின் அபிவிருத்தியையும், தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார்.
இந்த நிலையில், 1970இல் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, 955 குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றார். இருப்பினும் அவர் சளைக்காது போராடினார். மக்களுடன் மக்களுக்காக அவர்கள் குரலாக செயற்பட்டார்.
விளைவு, 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் 5,547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
தொடர்ந்து, 1979 இல் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெற்ற இவர், பாராளுமன்ற உபகுழுக்கள் பலவற்றிலும் அங்கத்துவராகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் இக்காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக செனட் சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 1989இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உறுப்பினராக நியமனம் பெற்ற இவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள கப்பல்,துறைமுகங்கள் மற்றும் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சுப்பதவி வழங்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாகவும் இது காணப்பட்டது.
1977முதல் 1994வரையான தனது, அரசியல் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களின் குரலாக செயற்பட்ட இவரை, சகபாடியான அமைச்சர் ஜோன் அமரதுங்க 'மிஸ்டர் கிளீன்' என்று பகிரங்கமாக பாராட்டியிருக்கின்றமை விசேடமாக நினைவு கூரத்தக்கது.
அந்தப் பாராட்டுக்கு அமைவாக அரசியலில் பெருவிருட்சமாகத் திகழ்ந்த அவர் 'கறைபடியாத கைகளைக் கொண்ட கனவான் அரசியல்வாதியாகவே' அன்றுமட்டுமல்ல, இன்றும் மதிக்கப்படுகின்றார், உதாரணப்படுத்தப்படுகின்றார்.
அபிவிருத்தியின் அடையாளம்
மன்சூர், மக்கள் சேவையில் தன்னை இணைத்துக்கொண்ட காலம் முதல் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார். குறிப்பாக, கல்வி, கலாசாரம், சுகாதாரம் ஆகிய துறைகளில் அதீத கரிசனை கொண்டிருந்தார்.
மிக முக்கியமாக, கல்முனையை புயல் தாக்கியபோது நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டமையையும் அந்நகரை மீள கட்டியெழுப்புவதற்கு உடன் திட்டங்களை வகுத்து செயற்படுத்தியமையும் கல்முனை நகரின் எழுச்சியின் மைல்கல்தான்.
மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மிகப் பெரிய பணியினைச் செய்திருக்கிறார். குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இப்பல்கலைக்கழகத்தில் எட்டு கட்டடங்கள் அமைப்பதற்கு காரணமாக இருந்துள்ளார். அதுமட்டுமன்றி அட்டாளைச்சேனையில் கல்வியியற் கல்லூரியை போராட்டங்களுக்கு மத்தியில் நிர்மாணித்தார்.
நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு கரவாகு பகுதி, சாய்ந்தமருது உள்ளிட்ட இடங்களில் மருத்துவ மனைகள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தார். விவசாயத்துறைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், கல்முனை பாரிய குழாய் நீர்த்திட்டம் ஆகியவற்றையும் உருவாக்கியவராக உள்ளார். இவ்வாறு அவருடைய பணிகள் பலவற்றைப் பட்டியலிட்டுச் செல்லலாம். ஆனால், எந்தவொரு நிர்மாணத்திலும் தனது பெயரை பொறித்து அபிமானம் தேடும் 'கடைநிலை' அரசியலை அவர் இறுதிவரையில் கடைப்பிடிக்கவே இல்லை.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையில் புகையிரதப்பாதையை விஸ்தரிப்புச் செய்யும் இவருடைய கனவு வெறும் ஆரம்பத்துடனேயே அரசியல் மாற்றங்களால் நனவாகாது போயுள்ளமை தற்போது வரையில் கவலைக்குரியதாக உள்ளது.
ஐ.நா.வில் ஒலித்த குரல்
1980இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்றிருந்த இவர், உலகெங்கும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்காக குரல்கொடுத்து முழு நாட்டிற்கும் கல்முனை மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தார்.
அதன்பின்னர், 2003இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் இவரை குவைத் நாட்டின் இலங்கைத் தூதுவராக நியமித்திருந்தார். இக்காலத்தில் தனது இராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்தி பல்வேறு உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
நீட்சி பெறும் மக்கள் சேவை
மக்களுக்கு இன்பத்திலும், துன்பத்திலும் மக்கள் சேவையை ஆற்றி மறைந்தும் மக்கள் மனங்களில் மாமனிதாக ஏ.ஆர்.மன்சூர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அத்தகைய மக்கள் சேவை நாயகனின் நீட்சியாகவுள்ள அவருடைய புதல்வாரன ரஹ்மத் மன்சூர் தற்போது கல்முனை நகரின் பிரதி மேயராக பதவிவகிக்கிறார். அவரும் தந்தையின் பாணியிலேயே கல்முனை நகரிலே அரசியலுக்குள் பிரவேசித்து மக்கள் பணிகளை முன்னெடுத்த வண்ணமுள்ளார். அத்தகையவரும், தந்தை கனவுகளை நனவுகளாக்க அடுத்தகட்டமாக செயற்படுவார் என்பது கல்முனை வாழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது.
-ஹாஜி.எம்.ஆர்.ஹாரூன் நஸீம்-
கல்முனை
Post A Comment:
0 comments so far,add yours