நூருல் ஹுதா உமர்


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரர் இறைவனை நிந்தித்து பேசியமைக்காக பாராளுமன்றத்தில் பேசிய மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவரது கட்சியை சேர்ந்த காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிறில், முஹம்மது நபியை இழிவுபடுத்தும் விதமாக கருத்து பகிர்ந்தமையை கண்டித்து ஒரு வசனமெனும் வாய்திறக்கவில்லை என்பதன் மூலமே அவரின் இரட்டை வேடத்தை நாம் அறிந்து கொள்ளலாம் என்பதுடன் பாராளுமன்றத்தில் அரசை எதிர்த்துவிட்டு பின்கதவால் சென்று அரசிடம் பெற வேண்டிய தமிழ் மக்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுவருவதை நாங்கள் அறியாமலில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சமகால அரசியல் முன்னெடுப்புகளும் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஊடகங்களின் சந்திப்பும் பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் இடம்பெற்ற போது இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் வாழும் விகிதாசாரங்களுக்கு ஏற்றாற்போல காணிகளை பங்கிட்டு கொடுக்க மனமில்லாமல் தடுத்துக்கொண்டு, திருகோணமலை மாவட்ட காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் கரிசனை செலுத்த மனமில்லாமல் தடைகளை போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், சாணக்கியனும் தொடர்பில் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் ஆதவு தெரிவிப்போர் இது தொடர்பில் கேள்வியெழுப்புவார்களா? பாராளுமன்றில் அரசை கண்டித்து கூக்குரல் இட்டுக்கொண்டு பின்வழியால் சென்று தமது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுபவர்கள் எங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை முன்கதவால் சென்று அரசுக்கு எத்திவைத்து தீர்வை கோரும் போது விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

மனநீதியில்லாமல் கல்முனையை துண்டாடி கேட்கும் சாணக்கியன் அணியினர் தனது சொந்த மாவட்ட முஸ்லிங்களுக்கு செய்கின்ற அநியாயங்கள் ஏராளம். பொதுவெளியில் நல்லவர்கள் போன்று வேடமணிந்து முதுகில் குத்தும் செயலையே முஸ்லிங்களுக்கு எதிராக செய்து வருகிறார்கள். இவர்களின் சதிவலையில் முஸ்லிம் சமூகத்தை சிக்கவிடாமல் பாதுகாப்பதில் எவ்வித சமூக வலைத்தள விமர்சனங்களையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவர்களின் இரட்டை முக நாடங்களை அறிந்துகொண்டே நாங்களும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கிறோம் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours