அரசியலிலே


ஒரு ஆன்மீக வெளிச்சம்.
சமயம் கடந்த
மனித நேய நடைமுறை.


போர், அழிவு, பொய்மை,
வஞ்சகம் இல்லாது
புரிந்துணர்வைக்
கட்டியெழுப்பும் புதிய பாதை.


அதுதான்,
வன்முறை அற்ற
வழிமுறை என்னும் சாத்வீகம்.
அண்ணல் காந்தியின்
அகிம்சை என்னும்
சத்தியாக் கிரகம்.
உண்மையோடு நிற்றல்.


தேசம் தேசமாய்ச்
சிதறிக் கிடந்தது
இந்திய உபகண்டம்


அவற்றைச் சேர்த்தெடுத்தவர்,
இந்திய தேசத்தைத்
தோற்று வித்தவர், காந்தி !


உணர்ச்சி வயப்பட்ட
தீவிர வாதத்துக்கு
அனுமதி இல்லை.


தேசத்தின் பெயரால்,
விடுதலையின் பெயரால்
மனித உயிர் போக்கலும்
கொலையே !


இதற்கான எந்த
உரிமையும்
யாருக்கும் இல்லை.


மக்கள் உணர்வை
அறவழிப் படுத்தி
ஏகாதிபத்தியத்தை
இறங்கிவரச்
செய்தார்.


தன்னவர் கூட
அறநெறி பிறழ்ந்தார்
தடுத்து நிறுத்திட
உணவு துறந்தார்.


சுதந்திரத்தின் போது
பிரிவினை நிகழ்ந்தது.
துக்கித்துப் போனார்,
வெட்கம் அடைந்தார்.


இந்துக்கள் கொலைகளை
நிறுத்தினர், அடுத்துப்
பாகிஸ்தானுக்குப்
புறப்பட இருந்தார்.


அங்கு போயிருந்தால்
இன்று வரைக்கும்
இந்திய – பாகிஸ்தான்
உறவு இருந்திருக்கும்.


தீவிரவாதம்
அதனைத் தின்றது.
துப்பாக்கி வேட்டுகள்
காந்தியைக் கொன்றன.


புரட்சிகள் கண்டோம்
புரட்சியாளர்கள்
சர்வாதிகாரிகள்
ஆனதே சரித்திரம்.


அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகள்
மக்களை அரவணைத்து
மலர்ச்சி கண்டதால்
மக்கள் ஆட்சியின்
மகிமை அங்குண்டு.


அங்கும் கொலைகள்,
கொள்ளைகள் நிகழ்ந்தன.
காந்தீயத்தில்
இவையெல்லாம் இல்லை.


காந்தியின் கொள்கையைக்
கடைப் பிடித் தொழுகினால்
உலகம் முழுவதும்
அமைதியில் செழிக்கும்.


அதற்குக்
காந்தியின்
பிறப்புத் தேவையில்லை.
காந்தியைப் பின்பற்றும்
தலைவர்கள் தேவை.


(அண்ணாதாசன்)
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours