( வி.ரி.சகாதேவராஜா)

அதிபர்கள் சிறந்த முகாமையாளராக(Manager) இருந்தால் மட்டும் போதாது. மாறாக, சிறந்த அகப்பார்வையுள்ள நல்ல தலைவர்களாக (Visionary Leader)அதிபர்கள் இருக்கவேண்டும்.அப்போதுதான் பாடசாலைகள் அபிவிருத்திகாணும்.மாணவர் சிறந்த அடைவை எய்துவர்.

இவ்வாறு , சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் ,அதிபர்கள் மத்தியில் உரையாற்றிய  கிழக்கு மாகாண மேலதிக மாகாணகல்விப்பணிப்பாளர் எ.எம்.ஜவாட் தெரிவித்தார்.


"ஆசிரியரிடத்தில் விதைத்தால் மாணவர்களிடத்தில் விளையும்"என்பது உண்மை என்றார்.

சம்மாந்துறைவலயத்திற்கான சூழ்நிலைப் பகுப்பாய்வுக்கூட்டம், நேற்றுமுன்தினம்(27) புதன்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சுகாதாரநடைமுறைக்கமைவாக  வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திற்கான கிழக்கு மாகாண மேலதிக மாகாணகல்விப்பணிப்பாளர் எ.எம்.ஜவாட் மற்றும் கல்விஅபிவிருத்திக்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.நிமலரஞ்சன் உள்ளிட்ட மாகாண கல்விப்பணிமனையின் கல்விஅதிகாரிகள் சமுகமளித்திருந்தனர்.

கிழக்குமாகாணத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைஅடைவுமட்டத்தினை அதிகரிக்கும்பொருட்டு பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் கிழக்குமாகாண கல்வித்திணைக்களம், அதன் ஓரங்கமாக வலயரீதியான சூழ்நிலைப்பகுப்பாய்வொன்றை மேற்கொள்ள கிழக்குமாகாண கல்வி உயர்கல்வி அதிகாரிகள் குழாத்தினர் சம்மாந்துறை வலயத்திற்கு நேரடியாக விஜயம்செய்தனர்.

அங்கு ,சம்மாந்துறை வலய கல்விஅபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் வலயபகுப்பாய்வு அறிக்கையை பல்லூடக பொறியினூடக காட்சிப்படுத்தி விரிவாக எடுத்துரைத்தார்.

அங்கு மேலதிக மாகாணகல்விப்பணிப்பாளர் ஜவாட் மேலும் உரையாற்றுகையில்:

கடந்த ஒன்றரை வருடகாலமாக இலங்கையில் மட்டுமலல உலகெங்கிலும் கொரோனா கல்வியை சீர்குலையவைத்துள்ளது. எனவே இப்போது குவிமையமாகஇருப்பது இழந்த கல்வியை மீட்பதாகும்.
எமது மாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களுக்கும் க.பொ.த.சா.தர அடைவுமட்டம் முன்னேற்றுவது தொடர்பில் இது மூன்றாவது சுற்றுவட்டத்தின் முதலாவது  விஜயம்.
இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளை மீள இயக்குவதில் அதிபர்களின் பங்கு அத்தியாவசியமாகின்றது. அதிபர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர் என்பார்கள். அதிபர் நினைத்தால் அந்த சமுதாயத்தையே மாற்றலாம்.

நெப்போலியன் சொன்னவிடயம் ஞாபகத்திற்கு வருகிறது. எந்தவொரு வேலைத்திட்டமென்றாலும் அதனை முதலில் நான் பாடசாலையிலேயே பரீட்சித்துப்பார்ப்பேன் என்றார். ஆம் பாடசாலை ஒரு பரீட்சார்த்த களம்.

சிங்கப்பூரை மாற்றியமைத்த தலைவர் லீகுவான்யு, மலேசியாவை மாற்றியமைத்த தலைவர் மகதிர்மொகமட். இவர்களெல்லாம் சிறந்த அகப்பார்வையுள்ள தலைவர்களாகவிரந்தார்கள். எனவே சிறந்ததொரு பாடசாலையை கட்டியெழுப்பவேண்டுமெனின் அதிபர்கள் அகப்பார்வையுள்ள தலைவர்களாக இருக்கவேண்டும்.

நாம் எப்போதும் பொறுப்புக்கூறுவதற்கும்(Responsiblity), வகைகூறுவதற்கும்(Accountablity) தயாராகவிருக்கவேண்டும். அதிபர்கள் பெறுபேற்று மைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு போதனாதலைமைத்துவம் இன்றியமையாதது.

நம்முன் உள்ள சவால்கள் அனைத்தையும் நல்ல சந்தர்ப்பங்களாக கருதி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். மாணவர்களை வழிப்படுத்தி ஊக்கப்படுத்தவேண்டும். எனவே சிறந்த அதிபர்களாக பாடசாலையையும் சமுகத்தையும் கட்டியெழுப்ப முயற்சிக்கவேண்டும். என்றார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours