(சுமன்)


மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப்பகுதியினை இன்று காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தினை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியை இன்று சிலர் வேலியிட்டு அடைக்க முற்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து குறித்த சம்பவத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது அங்குவந்த பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

சில காலங்களாக போலி உறுதிகளைக்கொண்டு குறித்த பகுதியை அபகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்திவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த வடிச்சல் பகுதி ஊடாகவே மழைகாலங்களில் நொச்சமுனை தொடக்கம் கல்லடி வரையான பகுதிகளில் உள்வரும் வெள்ளநீர் வடிந்து கல்லடி வாவியில் கலப்பதாகவும் குறித்த பகுதியை அடைத்தால் குறித்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியை பாதுகாப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் இதன் போது கோரிக்கை விடுத்தனர். குறித்த சம்பவம் காரணமாக கல்லடி பாலம் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours