கல்முனை மாநகர சுத்திகரிப்புகடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு இடையூறு விளைவித்த பொலிசாரை தட்டிக்கேட்ட உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அதேஉறுப்பினர் அதே கல்முனைப் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினரான சந்திரசேகரம் ராஜன் என்பவரே இவ்விதம் தன்னை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் தகாதவார்த்தைகளால் பேசி உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கல்முனைப்பொலிசில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் வெள்ளியன்று இரவு இடம்பெற்றது.
சம்பவம் பற்றி உறுப்பினர் ராஜன் தெரிவித்தாவது:
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவின் கீழ் இருக்கின்ற பாண்டிருப்பு பிரதேசத்தில் எமது மாநகரசபை ஊழியர்கள் வீதிவடிகான் சுத்திகரிப்பு பணியில் ஒரு ஜேசிபி கனரக இயந்திரம் பெரிய லாறி சகிதம் இருபக்கமும் வீதி மறிப்பு சமிக்ஞை பிளாஸ்ரிக் கூம்புகளைவைத்து ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அச்சமயம் கல்முனை பொலிஸ் உத்தியோகத்தரான அருணனும் அவரோடு வந்த மதுபோதையில் வந்த குழுவினர் கல்முனை மாநகர சபை சுகாதார ஊழியர்களை வீதி வடிகானை துப்பரவு செய்ய விடாமல் பிளாஸ்ரிக் கூம்புகளை அகற்றி அவர்களுக்கு அடித்து துரத்துவதற்கு எத்தனித்தார்.எனக்கு தகவல் கிடைக்கவே நான் அங்கு சென்று சமாதானம் செய்தேன்.
ஆனால் அவர்கள் மதுபோதையில் இருந்ததால் எந்தக்கதையையும் கேட்கவில்லை. மாறாக நினைத்தால் கஞ்சாவை வைத்து உன்னைக்கைதுசெய்த கூட்டில் அடைப்பேன் என்று என்னையும் தாறுமாறாக தகாதவார்த்தைகளால் பேசி அச்சுறுத்தினார். இதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே மறுகணம் நான் கல்முனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அம்பாறைப்பிராந்திய சிரேஸ்டபொலிஸ் அத்தியட்கருக்கும் அறிவித்தேன். அவர் உடனே உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை பணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
அதற்கமைய அனைவரும் நள்ளிரவு 12மணியளிவில் கல்முனைப்பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு உதவிப்பொலிஸ் அத்தியட்சகரால் விசாரிக்கப்பட்டனர்.நானும் முறைப்டுதெரிவித்தேன்.
குறித்த பொலிசார் மதுபோதையில் இருந்தார்களா என்பதை ஊர்ஜிதம் செய்ய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனிடையே தங்களை மாநகரபணியை புரியவிடாமல் தடுத்த பொலிசாருக்கு எதிராக மறுநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஊழியர்கள் அறிவித்தல்கொடுத்தனர்.எனினும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் நடவடிக்கையை அடுத்து அது விலக்கிக்கொள்ளப்பட்டது.
எது எப்படியிருப்பினும் இது தொடர்பாக நான் பொலிஸ் மாஅதிபர் பாதுகாப்புத்துறை செயலாளர் அமைச்சர் சரத்வீரசேகர ஆகியோருக்கு அறிவித்துள்ளேன்.
Post A Comment:
0 comments so far,add yours