(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதிலும்பெரும் பங்காற்றிய கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு சனிக்கிழமை (29) வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் இந்த நற்சான்றிதழை வழங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஏ.எம்.றகீப், எமது கல்முனை பிராந்தியத்தில் கொரோனா பெருந்தொற்று தாண்டவமாடிய காலப்பகுதியில், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக அஷ்ரப் வைத்தியசாலை ஆற்றிய பங்களிப்பை எவரும் மறந்து விட இயலாது எனத் தெரிவித்ததுடன், இந்த அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இப்பிராந்திய மக்கள் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இவ்வைத்தியசாலை மேற்கொண்ட சேவையின்போது அர்ப்பணிப்பு, தியாகங்களுடன் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் வைத்திய அத்தியட்சகரினால் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன்போது கொரோணா பெருந்தொற்று காரணமாக மரணித்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், டாக்டர் ஏ.எல்.பாரூக் ஆகியோர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்புக்கான வேலைத் திட்டங்கள் பற்றி விளக்கமளித்து உரையாற்றினர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours