(சியாத்.எம்.இஸ்மாயில்)



அக்கரைப்பற்றில் புகைப்படத் திரு விழா நாளை சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  காலை 8 .00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை அக்கரைப்பற்று மாநகர சபையின்  ஹல்லாஜ் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. 

Club Photo Ceylonica ஏற்பாட்டில் எமது பிராந்திய புகைப்பட கலைஞர்களின் திறமைகளை போட்டிகள் மற்றும் கண்காட்சிகள் வாயிலாக வெளிக்கொணர்ந்து அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்  திருவிழாவில் சர்வதேச புகைப்படப் போட்டிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களிடையே வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்கள், அக்கரைப்பற்று வரலாற்றுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு தினங்களும் புகைப்படத்துறை சம்பந்தமான பயிற்சிப்பட்டறைகளும் துறைசார் விற்பன்னர்களால் நடாத்தப்படவுள்ளது . 

புகைப்படக் கலைஞரும் விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் தலைமையில் நாளை சனிக்கிழமை  (29)  நடைபெறவுள்ள புகைப்படத்திரு விழா நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாஉல்லா அகமட் சகி  பிரதம அதிதியாக கலந்துகொள்வதோடு, கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சர்வதேச விருது வெற்றியாளர் ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர, அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மேம்பாட்டு கலாசார உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான், மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஏ.தீன் முகம்மட் , போட்டோஹப்பின் தலைமை பிரவீன், சமரக்கோன், எழுத்தாளர் உமாவரதராஜன், பட தாயாரிப்பாளரும் எமுத்தாளருமான ஹசீன் ஆதம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30) ஆம் திகதி  கழக தலைவரும் வைத்தியருமான ஆகில் அஹ்மட் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா நிகழ்வில்,  பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எஸ். முகம்மட் அன்சார், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், FNPIAS சர்வதேச விருது வெற்றியாளர் ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர,  போட்டோஹப்பின் தலைமை பிரவீன் சமரக்கோன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறபிக்கவுள்ளனர். 

மேலும் இறுதி நாள்  நிகழ்வுகளில் போட்டி  நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான  விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண கொவிட் நிலைமைகளினால் நடாத்த முடியாது போயிருந்த இக்கண்காட்சியானது இம்முறை வழமையை விட மிகவும் சிறப்பாக புகைப்பட ஆர்வர்களினதும் அனுசரணையாளர்களினதும் ஒத்துழைப்புக்களோடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, கிழக்கு மாகாண புகைப்பட கலை ஆர்வலர்களுக்கு உந்து சக்தி அளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள்  திறந்த அழைப்பு விடுக்கின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours