(சுமன்)



தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது மிகவும் வரவேற்கத் தக்க விடயம். இதனைக் குழப்புவதனூடாக இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகத் திட்டங்கள் எமது பிரதேசங்களில் நிறைவேற்றப்படும். தமிழ்த் தேசியத்தை முற்றாக அழிப்பதற்கு சிங்களம் போடும் சதிக்கு நம்மவர்கள் சிலர் துணையாக நிற்கின்றார்கள். என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுத்ததில்லை. மாறாக ஒன்றிணைந்திருந்த கட்சிகள் பிரிந்து சென்று தனித்தனியே தங்களின் சுயநல அரசியலை முன்னெடுத்தது தான்நிலைமையாகக் காணப்பட்டது. ஒரு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் எங்களுடைய ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஆராய்ந்து அந்த விடயத்தை வென்றெடுப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்ச்சித் திட்டமாக வரைபைத் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கின்றன.

13வது திருத்தச் சட்டம், அரசியற் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் மற்றும் இவற்றுக்கெல்லாம் இந்தியாவின் ஒத்துழைப்பு போன்றன தொடர்பாக இவ்வரைபில் குறிப்பிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறிகின்றோம்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தமிழர்களின் ஆயுதபலம் சிதைக்கப்பட்டது. ஆனால் தமிழர்களின் தேசியக் கோட்பாடு என்பது என்றும் அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது. யுத்தம் முடிவுற்றதும் அரசாங்கமானது மிக இராஜதந்திரமான முறையில் தமிழ்த் தேசியத்தையும், தமிழ் மக்களின் இருப்பையும் சிதைப்பதற்குப் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவும், இந்தியாவின் அனுசரணையைக் கோரிய வேண்டுகோளும் பேரினவாத அரசாங்ககத்திற்கு ஒரு பேரிடியை ஏற்படுத்தியிருக்கின்றது. தென்னிலங்கையில் இருக்கின்ற இனவாதக் கட்சிகளும், ஜனநாயகக் கட்சிகளும் ஒரு பயத்தில் திளைத்துள்ளார்கள்.

இவ்வாறு ஒற்றுமையான பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே சில தமிழ் விரோத கட்சிகள்; என்று சொல்லப்படவேண்டிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைவாக இந்த முயற்சிகளைக் குழப்புவதற்கும், முறியடிப்பதற்கும் முயற்சிக்கின்றது. உண்மையில் எமது மக்கள் தெளிவாக நிதானமாக புரிதலுடன் இருக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டம் மிக உச்ச கட்டத்தைத் தொட்ட காலத்தில் அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராட்டத்திற்கு எந்தவகையிலும் ஒத்துழைப்பு வழங்காத இந்தக் கட்சியானது வடக்கு கிழக்கில் தமிழர்கள் ஆட்சி செய்வதற்கு இருக்கின்ற அதிகரங்களைக் கூட இல்லாமல் செய்வதற்கு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இது உண்மையில் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விடயம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் இவர்களுடைய செயற்பாடுகளுக்கும், இலங்கை அரச பயங்கரவாதத்தின் செயற்பாடுகளுக்கும் எவ்வித வேறுபாடுகளும் காணப்படவில்லை.

காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த இந்த தாயகப் பூமியை குறைந்தபட்ச அதிகாரத்துடனாவது நிருவாக ரீதியில் நாமே ஆட்சி செய்யக் கூடிய விதத்தில் அமைந்துள்ள 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எங்களது தமிழ் அரசியற் கட்சிகள் முனைப்பாக இருக்கின்றன. ஆனால், இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக அக்கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பொய்யான பரப்புரையை மக்கள் மத்தியல் பரப்பி 13ஐ இல்லாதொழித்து தமிழ்த் தேசியத்தின் நிருவாகக் கட்டமைப்பின் வடிவத்தை இல்லாதொழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தை முற்றாக அழிப்பதற்கு சிங்களம் போடும் சதிக்கு இவர்கள் துணையாக நிற்கின்றார்கள்.

எமது ஆயுதப் போராட்ட அமைப்பானது மிகப் பெரிய சாம்ராச்சியம். மக்;களின் விடுதலைக்காக போராடிய போரரிகள் அனைவரும் உயர்ந்தவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது செயற்பாடுகளையும் தியாகங்களையும் சுயநல, சந்தர்ப்பவாத அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.

அகில இலங்கைத் தமிழ் காங்ககிரஸ் மிகவும் போலியான கட்சியாகவே இருக்கின்றது. இவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் இவர்களது முகவர்கள் பாரிய நிதியினை வழங்குகின்றார்கள். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிதிகள் அனைத்துமே இவர்;களது சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் தங்;களின் மனச்சாட்சியின் படி இவற்றைச் சிந்திக்க வேண்டும்.

எமது மாவீரர்களின் பெற்றோர்கள் இந்த மண்ணிலே மிகவும் வறுமையான நிலையில் வாழுகின்றார்கள். போராளிகளின் பிள்ளைகள் கல்வியை முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இவ்வாறு எமது மக்கள் வாழுகின்ற போது அவர்களுக்குக் கரம் கொடுத்து அவர்களது வாழ்வியலை உயர்த்தாது இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு நிதிகளை வழங்கி தமிழ்த் தேசியத்தின் இருப்பை அழிப்பதற்கு முன்னோடியாகச் செயற்படுகின்றீர்கள்.

ஆனாலும், எமது புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகள் பலர் இன்றும் எமது மக்களுக்கான உதவிகளைச் செய்து அவர்களை கௌரவமாக வாழ வைக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

ஒரு மறவனின் தலைமையின் கீழ் ஒன்றாக இருந்த நாங்கள் தற்போது பல கூறுகளாகப் பிரிந்து ஒவ்வொரு கட்சிகளாக உடைந்து நிற்கின்றோம். இது எதிர்காலத்தில் எமக்கு நன்மையைத் தரப்போவதில்லை. தற்போது இராஜதந்திர ரீதியாக எமக்கான ஒரு தளத்தை நிலைநிறுத்திக் கொண்டு அதில் நின்று மிகப் பலமாக எமது அரசியல் மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுதிரண்டு செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்த ஆறு கட்சிகளின் ஒன்றிணைவு என்பது மிகவும் வரவேற்கத் தக்க விடயம். இதனைக் குழப்புவதனூடாக இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகத் திட்டங்கள் எமது பிரதேசங்களில் நிறைவேற்றப்படும். அரசியல் வடிவம், நில ஆக்கிரமிப்பு தேசிய ஒற்றுமையை இல்லாமல் செய்தல், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் போன்றன ரீதியில் எம்மை முடக்குதல் போன்ற பல விடயங்கள் இங்கே திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை எமது அரசியற் கட்சிகள் அனைவரும் ஒருமித்து நின்று தடுக்க வேண்டும்.

தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைத்து ஆயுத அரசியல் ரீதியாக முப்பது வருடங்களுக்கு மேல் எமது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் எமது மூத்த அரசியற் தலைவர்களும் இந்தப் பயணத்துடன் இணைந்து கொண்டார்கள். எமது ஆயுதப்பலம் சிதைக்கப்படடதன் பின்னர் துணிவான தலைமைத்துவத்தை வழங்க யாரும் முன்வரவில்லை.

இன்றைய சூழலில் எமது மக்கள் மிகமிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுச் செல்கின்றார்கள். அண்மைக் காலங்களில் வடக்கு கிழக்கில் பல வடிவங்களில் ஆக்கிரமிப்பு செய்வதற்கான முனைப்புகள் அரசாங்கத்தினாலும், சீனா போன்ற நாடுகளுடாகவும் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இடம்பெறவுள்ள ஐநாவின் 49வது கூட்டத்தொடரில் பாரிய நகர்வொன்றை ஐநா சபை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு இறுக்கமான முடிவு, பாரிய அழுத்தம் கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் இருக்கின்றது. இந்த விடயத்தை அரசாங்கம் அறிந்து இதிலிருந்து எவ்வாறு தப்பிக் கொள்வது என்பதற்கான இராஜதந்திர திட்டங்களை வகுத்து தமிழ் மக்களுக்கான விடயங்களை வழங்குவதாகப் பொய்யான தகவல்களை வழங்கி, ஏமாற்றி மீண்டும் நீண்டகால இடைவெளியினைப் பெற்று அதற்குள் தங்களுடைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றது.

ஐநா சபையில் எமது மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைக் கொண்டு வருவதென்பது மிகக் குறைவாகவே இருக்கின்றது. எமது பிரதேசங்களில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், போன்ற பல விடயங்கள் உரிய முறையில் பேசப்படவில்லை. ஆயினும் இனிவரும் கூட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணையொன்று இடம்பெற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனை ஐநா சபை நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைத் தாண்டி நங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் விசாரணையை மேற்கொள்ள முடியும், தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமில்லாத ஒரு விடயம் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours