(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கடந்த மாதத்திற்கான மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (09) திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக  
மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த மீளாய்வு கூட்டத்திற்கு மாவட்ட செயலக சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் எஸ்.எம்.பசீர், பதினான்கு பிரதேச செயலகங்களைச் சார்ந்த
தலைமையக முகாமையாளர்கள், முகாமைத்துவ பணிப்பாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள்,
மாவட்ட செயலகத்தின் ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் ரீதியாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுத்துள்ள, முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அவற்றிற்கான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக எமது வினைத்திறனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தினை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இதன்போது சகல உத்தியோகத்தர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார்.

அதேபோன்று இதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்காலத்தில் எவ்வாறாக சமுர்த்தி பயனாளிகளுக்கு ஆக்க பூர்வமான சிறந்த சேவையினை வழங்குவது என்பது தொடர்பாகவும் மாவட்டத்தில் பிரதேச ரீதியாக சமுர்த்தி திட்டங்களை செயற்படுத்துகின்றபோது எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தது.

அதேவேளை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மாதாந்தம் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணப் பெறுமதியினை அதிகரித்து வழங்கவுள்ளமை தொடர்பாகவும் இதன்போது உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமையும்குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours