19 வது அரசியலமைப்பு அரசியல் சரத்து கொண்டு வரப்பட்டு நாட்டின் ஜனநாயகம் உயிரப்பிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (15) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
எம்மால் உயிர்பிக்கப்பட்ட ஜனநாயகத்தை தற்போதுள்ள அரசு மரணிக்கச் செய்துள்ளது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுதந்தரமற்ற நிலையில் காணப்படுகின்றன. எனவே ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு கடந்த நல்லாட்சியில் தான் அடித்தளமிடப்பட்டது.
தற்போது 20வது சரத்தைக் கொண்டு வந்து அவையனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன. தற்போது அரசாங்கம் பசளையை நிறுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.
இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இலவசமாக பசளை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறிய அரசு தற்போது பணம் கொடுத்துக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எந்தப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்குச் சென்றாலும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. வரிசை யுகம் ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளார்கள்.
இன விரிசல்கள் எற்படுத்தப்பட்டுள்ளன. எமது கட்சி இன ஒற்றுமைக்கு வழிவகுந்துஇ செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள் சிந்தித்து செயற்படுவதற்குரிய காலம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரம் குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை. வெளிநாட்டு வருமானங்கள் குறைந்துள்ளன.
சர்வதேச மட்டத்தில் ஏற்றுமதி பாரிய வீழ்ச்சிடைந்துள்ளது. ஒரு திட்டமான பொருளாதாரக் கொள்கை இல்லை மக்கள் மிகவும் இன்னலுறுகின்றார்கள்.
இந்த நிலையில் அரசாங்கம் வீண் செலவுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நாட்டின் சரித்திரத்திலே இல்லாத பிரச்சினைகளை தற்போது மக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இதற்கு ஒரே வழி இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டுஇ எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமராஸ அவர்களின் தலைமையில் ஸ்த்திரமான அரசை நிறுவுவது தான். இதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours