(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மாணவ-மாணவிகளே! நிச்சயமாக நாங்கள் மற்றவருடைய சுதந்திரத்தை மதித்து, அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படாதவர்களாக வாழ்ந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக வேண்டிக் கொள்கிறேன் என கல்முனை நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். றியாழ் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் நேற்று (04) பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற வேளை அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் எங்களுடைய சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்றவர்கள். இந்தப் பாடசாலை காலத்தில் நீங்கள் பெற்றுக் கொள்கின்ற பயிற்சியும் உங்கள் மனதில் செதுக்கி கொள்கின்ற விடயங்களுமே நாளை எமது சமுதாயத்தின், எமது நாட்டின் நல்ல நிலைக்கும் ஒரு சுபீட்சமான, சந்தோஷமான நிலைக்கும் இட்டுச் செல்லப் போகின்றது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அந்த வகையில் இன்று இரண்டே இரண்டு விடயங்களை மாணவ மாணவிகளுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
உண்மையில் நாம் இன்று எங்களுடைய 74ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம் என்றால், என்றோ ஒருநாள் எங்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு மீண்டும் எமக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. அல்லது அதனை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த சுதந்திரத்தினை பறித்தவர்கள் யார்? வேற்றுகிரகத்தில் இருந்து வந்த வேற்றுக்கிரக வாசிகளா? அல்லது விலங்குகளா என்று பார்த்தால், உண்மையில் இல்லை எம்மைப் போன்ற மனிதர்களே எங்களுடைய சுதந்திரத்தினைப் பறித்தவர்கள். மீண்டும் நாம் அதனை பெற்றிருக்கின்றோம்.
ஆகவே, ஒரு மனிதனுடைய சுதந்திரத்தைப் பறிக்கின்றவர்கள் ஒரு சக மனிதர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். நாம் எமது சுதந்திரத்துக்காக போராடிய வேண்டியதை விடவும் இன்னொரு மனிதனுடைய சுதந்திரத்தினை நாங்கள் மதித்து நடக்கின்ற வேளையில், இந்த நாட்டில் இந்த உலகில் சகல பொழுதிலும் சுதந்திரமானது மலர்ந்து கொண்டிருக்கும் என்ற விடயத்தினை நாங்கள் அனைவரும் உணர வேண்டும். நாங்கள் அனைவரும் மற்றவருடைய சுதந்திரத்தை மதிக்க வேண்டும். மற்றவர் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிய வழிவகைகளை நாம் நாமாகவே செய்கின்ற வேளையில் அது தன்னிச்சையாக நம்முடைய சுதந்திரத்தை உறுதிப்படுகின்ற ஒரு செயற்பாடாக அமையும்.
ஆகவே, மாணவ-மாணவிகளே! இன்றிலிருந்து நிச்சயமாக நாங்கள் மற்றவருடைய சுதந்திரத்தை மதித்து, அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படாதவர்களாக வாழ்ந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக வேண்டிக் கொள்கிறேன்.
இரண்டாவது விடயம் எப்பொழுது ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டி வருகின்றதென்றால், தன்னுடைய சுயநலம் காரணமாகவே ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் சுதந்திரத்தில் கை வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சுயநலங்கள் என்கின்ற வேளையில் முற்றுமுழுதான சுயநலங்களைப் பற்றி நான் கூறவில்லை. எந்த சுயநலத்தினால் மற்ற மனிதனுக்கு பாதிப்பு வருமோ அந்த வகையான சுயநலங்களை நாங்கள் தவிர்ந்து நடக்க வேண்டும் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
வேன்ட் வாத்தியங்கள் முழங்க கடட், சாரணர் மரியாதையுடன் பாடசாலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதன்போது பாடசாலையில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், மாணவ, மாணவிகள், வேன்ட், கடட், சாரணர், முதலுதவிப் பிரிவினர், ஆசிரியர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours