கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட கிழக்கின் அவிழ்தம் சஞ்சிகை மற்றும் ஆயிரம் வேரும் அரும் மருந்தும் என்ற நூல்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் (2022.02.14) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கொவிட் 19 தொற்றுக் காலத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் பாரிய பங்களிப்புக்களை மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுக்கும் செய்திருந்தது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசித்த குடும்பங்கள் மற்றும் தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் என சகல மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் சுவதாரணி மற்றும் இமியுன் வூஸ்ட்டர் பானங்களுடன் ஆயுள்வேத மருந்துகளையும் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் பாராது களத்தில் நின்று வழங்கி வந்த செயற்பாடுகளை சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரனின் கவனத்திற்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் கொண்டு வந்தார்.
இதன்போது மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரினால் கிழக்கின் அவிழ்தம் சஞ்சிகை மற்றும் ஆயிரம் வேரும் அரும் மருந்தும் என்ற நூல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரனுக்கு வழங்கி வைத்த அதேவேளை நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் சுவதாரணி பொதிகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவின் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ், நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.நவந்திரராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours